தமிழக தேர்தல் முடிவு... மிகப் பெரிய சாதனை படைத்த திமுக! பெற்ற வாக்குகள் மட்டும் எவ்வளவு தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 23 இடங்களில் வென்றுள்ள திமுக அதிக வாக்குகள் பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் ஏழு கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவில், பாஜக கூட்டணி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது.

இருப்பினும் தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கே தமிழக மக்கள் தங்கள் வாக்குகளை அளித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தத் தேர்தலில் போட்டியிட்ட 23 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்ற திமுக 32.76 சதவீதம் அதாவது 1 கோடியே 38 லட்சத்து 77 ஆயிரத்து 622 வாக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

கடந்த 1957-ஆம் ஆண்டிலிருந்தே திமுக தேர்தலில் போட்டியிட்டு வருகிறது. அதன் படி மாறி மாறி வெற்றி தோல்விகளை சந்தித்து வருகிறது.

1996 மக்களவைத் தேர்தலில் தமாகாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட 18 இடங்களிலும் திமுக வென்றது. 1998-ல் தமாகாவுடன் கூட்டணி அமைத்து 5 இடங்களில் வென்றது. 1999-ல் பாஜகவுடன் கூட்டணி அமைத்த திமுக 12 இடங்களில் வென்றது.

2004-ல் காங்கிரஸ், பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்த திமுக போட்டியிட்ட 16 தொகுதிகளிலும் வென்று 70 லட்சத்து 64 ஆயிரத்து 393 வாக்குகளைப் பெற்றது. 2009-ல் 18 தொகுதிகளில் வென்ற திமுக 76 லட்சத்து 25 ஆயிரத்து 397 வாக்குகளைப் பெற்றது.

கடந்த 2014 தேர்தலில் விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்த திமுக, 34 தொகுதிகளில் போட்டியிட்டு 23.61 சதவீதம் அதாவது 95 லட்சத்து 75 ஆயிரத்து 850 வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி இந்த மிகப் பெரிய வெற்றியால மக்களவையில் அதிக தொகுதிகள் வென்ற பாஜக 303 தொகுதிகளுடன் முதல் இடத்திலும், காங்கிரஸ் 52 இரண்டாவது இடத்திலும், அதற்கு அடுத்த படியாக மூன்றாவது இடத்தில் தேசிய கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers