தொடர்ந்து 6 மணிநேரம் வீடியோ கேம் விளையாடிய சிறுவன்.. பின்னர் நேர்ந்த பரிதாபம்!

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில், சிறுவன் ஒருவன் தொடர்ந்து 6 மணிநேரம் பப்ஜி என்ற வீடியோ கேமை விளையாடிய நிலையில், திடீர் நெஞ்சு வலியால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் நீமூச் நகரைச் சேர்ந்தவர் ஹருன் ரஷீத் குரேஷி. இவரது 16 வயது மகனான ஃபர்கான் குரேஷிக்கு, மொபைல் போனில் வீடியோ கேம் விளையாடுவது மிகவும் பிடிக்கும்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமையன்று ஃபர்கான் தொடர்ந்து 6 மணிநேரம் பப்ஜி வீடியோ கேமை விளையாடியுள்ளார். அப்போது திடீரென நெஞ்சைப் பிடித்துக்கொண்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது மகனின் இறப்பு குறித்து ஹருன் ரஷீத் குரேஷி கூறுகையில், ஃபர்கான் தனது மதிய உணவை உண்ட பின்பு தொடர்ந்து வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், மயக்கமடைவதற்கு முன் சுமார் 7 மணியளவில் மிகவும் பதற்றத்துடனும், ஆத்திரத்திலும் இருந்த ஃபர்கான், மற்ற ஆட்டக்காரர்களிடம் மிகவும் கூச்சலிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறுவனின் இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்