கிராமசபை பிரச்சினையை உடனடியாக தீர்க்க.. சீமான் பலே திட்டம்

Report Print Basu in இந்தியா

தமிழகத்தில் மே 1ம் திகதி அன்று நிறுத்திவைக்கப்பட்ட கிராமசபைக் கூட்டங்களை உடனடியாக நடத்திட வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் மனு வழங்கும் திட்டத்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை, தமிழகத்தில் நான்கு நாட்கள் [1. சனவரி-26 (குடியரசு நாள்) 2. மே-01 (உழைப்பாளர் நாள்) 3. ஆகஸ்ட்-15 (விடுதலைத் திருநாள்) 4. அக்டோபர்-02 (காந்தி பிறந்தநாள்)] கண்டிப்பாக கிராமசபைக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென்ற சட்ட நடைமுறை உள்ளது.

இந்த கிராமசபைக் கூட்டங்களில் கிராம மக்கள் ஒன்றுகூடி தங்கள் கிராமத்தில் உள்ள நீர் நிலைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, சாலை வசதி, மருத்துவ வசதி, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் தீர்மானம் நிறைவேற்றலாம்.

அதன்படி, தமிழகத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கடந்த மே-01, உழைப்பாளர் நாளன்று நடைபெற வேண்டிய கிராமசபைக் கூட்டம் மக்களவை தேர்தல் நடத்தை விதிகளின் படி நிறுத்திவைக்கப்பட்டது.

தற்போது மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைதேர்தல் ஆகியவை நடைபெற்று முடிவுகளும் வெளியான பின்னரும் மே-01 அன்று நிறுத்திவைக்கப்பட்ட கிராமசபைக் கூட்டங்களை நடத்திட தமிழக அரசு தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

எனவே, மாவட்ட/தொகுதிப் பொறுப்பாளர்கள் தங்கள் பகுதிகளில் கிராமசபைக் கூட்டங்களை உடனடியாக நடத்திட வலியுறுத்தி தத்தம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிர்வரும் 17-06-2019 திங்கள்கிழமையன்று ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மனு வழங்கும் நிகழ்வை உரிய முறையில் முன்அனுமதிபெற்று ஒருங்கிணைக்குமாறு மாவட்ட/தொகுதிப் பொறுப்பாளர்களை அறிவுறுத்துகின்றேன்.

மேலும், நாம் தமிழர் உறவுகள் தத்தம் கிராமங்களில் முன்னெடுக்கப்படும் கிராமசபைக் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்று மக்கள் பணியாற்ற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers