அண்ணனின் உயிரை பறித்த தங்கைக்கு வாங்கிய திருமண பரிசு

Report Print Vijay Amburore in இந்தியா

கர்நாடக மாநிலத்தில் தங்கையின் திருமணத்திற்கு விடுமுறை கிடைக்காததால், மருத்துவர் தூக்கில் தொங்கியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஓம்கார் என்கிற மருத்துவர் (36), கடந்த புதன்கிழமையன்று நடைபெறவிருந்த தன்னுடைய சகோதரியின் திருமணத்திற்காக விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளார்.

ஆனால் மருத்துவ துறை தலைவர் கீதா கட்வால் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட ஓம்கார், வியாழக்கிழமையன்று விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் ஓம்கார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் ஒன்றுகூடி, தலைமை மருத்துவருக்கு எதிராக போராட்டம் நடத்த ஆரம்பித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஓம்காரின் தந்தை கூறுகையில், சில தினங்களுக்கு முன் எங்களுக்கு போன் செய்த மகன், காரணமே இல்லாமல் தலைமை மருத்துவர் அதிக சித்ரவதை கொடுப்பதாக கூறினான்.

அவனுடைய சகோதரியின் திருமணத்திற்கு ஆசையாக வாங்கிய துப்பட்டாவால் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளான் என வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், கீதா அடிக்கடி ஓம்காருக்கு தொந்தரவு கொடுத்து வந்தது மற்ற மருத்துவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

அதேசமயம் சிகிச்சையின் போது குழந்தை இறந்த சம்பவத்தில் ஓம்காரின் அசாதாரண நிலையே காரணம் என கீதா பொய் புகார் அளித்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்கள், ஓம்கார் குடும்பத்திற்கு கீதா சார்பில் ரூ. 1 கோடி இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...