உயிருக்கு போராடிய குழந்தை... காப்பாற்ற துடித்த தாய்! அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் காய்ச்சலால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தையை வைத்து தாய் அழுது கொண்டிருந்ததைக் கண்ட இளைஞர் ஒருவர் இருவரையும் இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்று காப்பாற்றிய சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

பீகார் மாநிலம் முசாபர்பூர் அருகே உள்ள கிராமத்தின் சாலையோரத்தில் தாய் ஒருவர் மூளைகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையுடன் பரிதாபமாக உட்கார்ந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தான் காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்றுவந்த அந்தக் குழந்தை காய்ச்சல் குணமானதால் வீடு திரும்பியுள்ளது. வீடு திரும்பியதும் மீண்டும் காய்ச்சல் ஏற்படவே குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

நீண்ட தூரம் நடந்து வந்ததால், குழந்தையை தூக்கிக் கொண்டு, மருத்துவமனைக்கு செல்ல முடியாமல், அங்கிருந்த சாலையோரத்தில் குழந்தையை வைத்துக் கொண்டு அழுதபடி இருந்துள்ளார்.

அந்த வழியே சென்றவர்கள் அவரை பார்த்து தான் சென்றார்களே தவிர என்ன என்று எதுவும் கேட்கவில்லை.

அப்போது அந்த வழியே வந்த நிரூபர் அமீர் என்பவர் உடனடியாக இருவரையும் இருசக்கர வாகனத்தில் அமர வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மருத்துவமனைக்குச் சென்றபிறகு தான் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது தெரியவந்தது.

காய்ச்சல் அதிகமானதால் குழந்தையின் உடல் அதிக வெப்பத்தால் தகித்துள்ளது. சிறிது தாமதமாகியிருந்தாலும் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என மருத்துவர்கள் விளக்கியதுடன் அந்த நிருபரின் செயலை பாராட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அந்த பெண் கூறுகையில், நீண்ட நேரம் அங்கு அழுத படி உட்கார்ந்து கொண்டிருந்தேன், யாரும் உதவ முன்வரவில்லை, என்னால் அவ்வளவு தூரம் குழந்தையைத் தூக்கிச்செல்ல முடியவில்லை. சரியான சமயத்தில் வந்து எங்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவந்தார் அமீர். அவரால் தான் இன்று என் குழந்தை உயிர் பிழைத்துள்ளது என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.

அமீர் பாதிக்கப்பட்ட குழந்தையை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் புகைப்படத்தை அங்கிருந்தவர்கள் வலைதளங்களில் பதிவிட அவரின் மனிதநேயத்துக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 120-ஐ தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers