5ஆம் வகுப்பிலேயே முனைவர் பட்டம்.. சாதித்த தமிழ் மாணவன்!

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், ‘மதிப்புறு முனைவர்’ எனும் பட்டம் பெற்று பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வகுமார். தனியார் நிறுவன காவலாளியாக பணிபுரியும் இவருக்கு, மதுரம் ராஜ்குமார் எனும் மகன் உள்ளார்.

அரசுப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வரும் மதுரம் ராஜ்குமார், கவிதை படைக்கும் ஆற்றால் பெற்றவராக விளங்கி வருகிறார். அன்பு, அழுகை, இன்பம், துன்பம் என எந்த நிகழ்வையும் கவிதையாக்கும் ஆற்றல் கொண்ட ராஜ்குமாரை அவரது பெற்றோரும், ஆசிரியர்களும் ஊக்கப்படுத்தினர்.

இதனால் 4ஆம் வகுப்பிலேயே 55 தலைப்புகளின் கீழ் ரத்தினச்சுருக்கமாக நல்ல கவிதைகளை படைத்தார். இவற்றில் ‘பள்ளி’, ‘மகிழ்ச்சி’, ‘கோபம்’, ‘பட்டம்’ ஆகியவை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ராஜ்குமாரின் கவிதைகளை சேகரித்த அவரது பெற்றோர், ‘நல் விதையின் முதல் தளிர்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டனர்.

இந்நூலுக்கு பாராட்டுக்களும், பல்வேறு அமைப்பின் விருதுகளும் குவிந்தது. அதன் பின்னர், 'Universal Achievers Book of Records' என்ற நிறுவனம், கவிதை எழுதுவதில் இதுவரை எந்த சிறுவனும் நிகழ்த்தாத உலக சாதனையை நிகழ்த்திட, மதுரம் ராஜ்குமாருக்கு அழைப்பு விடுத்தது.

அதனைத் தொடர்ந்து, வாழப்பாடியில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு தலைப்புகளின் கீழ் 173 கவிதைகளை எழுதி உலக சாதனை படைத்தார் ராஜ்குமார். மாவட்ட, வட்டார கல்வி அலுவலகர்கள், கவிஞர்கள், இலக்கிய அமைப்பினர் பலரும் ராஜ்குமாரை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர்.

இந்நிலையில், சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் சென்னையில் நடைபெற்ற விழாவில் மதுரம் ராஜ்குமாருக்கு ‘மதிப்புறு முனைவர் பட்டம்’ வழங்கியது. ராஜ்குமாரின் தந்தை செல்வகுமார் கூறுகையில், ‘நான்காம் வகுப்பு படிக்கும்போது, பள்ளியில் நடைபெற்ற கவிதைப் போட்டிக்கு ஒரு கவிதை எழுதிக் கொடுக்குமாறு எனது மகன் மதுரம் ராஜ்குமார் கேட்டதற்கு, நீயே உன் மனதில் தோன்றியதை எழுதிக் கொடு என்றேன்.

இது தான் இன்று, என் மகன் உலக சாதனை படைத்த கவிஞராக மாறியதற்கு அடித்தளமாக அமைந்ததாகக் கருதுகிறேன்’ என தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாணவர் ராஜ்குமார் கூறுகையில், ‘எனது பெற்றொரும், ஆசியர்களும் கொடுத்த ஊக்கத்தால் எனது எண்ணத்தை கவிதையாக எழுதும் திறனைப் பெற்றேன்.

நான் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும், எனது பெற்றோர் சளைக்காமல் பதிலைத் தேடித் தந்தனர். சிறுவயதிலேயே நான் கவிதை நூல் வெளியிட்டு உலக சாதனை படைப்பதற்கும், பல விருதுகளைப் பெறுவதற்கும், தமிழறிஞர்களைச் சந்திப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததாய் மொழிக்கு என்னால் முடிந்த புகழைப் பெற்றுக் கொடுப்பேன். கவிதையில் மட்டுமின்றி கல்வியில் சாதிப்பதே என் எதிர்கால லட்சியம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்