நான் இருக்கேன் பா உங்களுக்கு.. தனியாளாய் ஒரு ஏக்கரில் நடவு நட்ட மாணவி! குவியும் பாராட்டு

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தனி ஆளாக நின்று, ஒரு ஏக்கர் நிலத்தில் நெற்பயிரை நடவு செய்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள அக்கரைவட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கருப்பையன்-காந்திமதி தம்பதி. விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட இவர்களுக்கு ராஜலட்சுமி என்ற மகள் இருக்கிறார்.

இவர் அரசு கலைக் கல்லூரியில் படித்தவாறே தனது தந்தையிடம் விவசாயப் பணிகளை கற்றுக் கொண்டுள்ளார். இதனால் படிக்கும் நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களில் விவசாயப் பணிகளைச் செய்வார்.

இந்நிலையில், தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் ஆழ்குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சி நெற்பயிரை நடவு செய்யும் பணியை தொடங்கினார் கருப்பையன். அதற்காக விவசாயத் தொழிலாளர்களிடமும் கூறி வைத்திருந்தார். ஆனால், குறித்த நேரத்தில் எவரும் வரவில்லை.

கருப்பையன் எங்கு தேடியும் ஆட்கள் கிடைக்காததால் மிகுந்த விரக்தியடைந்தார். இதனை அறிந்த அவரது மகள் ராஜலட்சுமி, ‘இதுக்கு ஏன்பா கவலைப்படுறே, நான் நடவு நடுகிறேன்’ என்று கூறியுள்ளார். ஆனால், ஒரு ஏக்கர் வயலில் தனியாளாய் எப்படி நடவு செய்வாய் என கருப்பையன் கேட்டுள்ளார்.

எனினும், ராஜலட்சுமி விடாப்பிடியாக பெற்றோரை சம்மதிக்க வைத்தார். பின்னர் அப்பாவுக்கு உதவியாக இருந்து, 3 நாட்களில் தனியாளாய் ஒரு ஏக்கர் நிலத்தில் நடவு செய்யும் பணியை வெற்றிகரமாக முடித்தார். இந்த விடயம் அக்கம்பக்கம் உள்ளவர்களுக்கு தெரிய வந்து, ராஜலட்சுமியை அனைவரும் பாராட்டினர்.

இது குறித்து ராஜலட்சுமி கூறுகையில், நடவு செய்ய நாற்று எல்லாம் தயாராக இருந்த நிலையில், நடவுக்கு ஆட்கள் வரவில்லை. ஆள்பற்றாக்குறை அடிக்கடி ஏற்படுகிறது. நாற்று விடுவது தொடங்கி, நடவு நட்டு அதை வளர்த்து அறுவடை செய்வதற்குள் விவசாயிகள் படும் கஷ்டத்துக்கு அளவே இல்லை. இந்த வேலை தெரிந்ததால் அந்த கஷ்டத்தை நான் நன்கு உணர்வேன்.

பயிர் தயாராக இருந்தும் நட முடியவில்லை என அப்பா கவலைப்பட்டதைப் பார்த்த பிறகு, ஏன் நாமே நடவு நட்டால் என்னவென்று தோன்றியது, அதை அப்பாவிடம் கூறினேன். வேண்டாம்மா இது ஒரு ஆள் செய்கிற வேலை கிடையாது என்றவரை, சம்மதிக்க வைத்து பணியில் இறங்கினேன்.

23ஆம் திகதி காலை தொடங்கிய வேலையை மாலை வரை செய்தேன். ஆனால் ஒரு பகுதி மட்டுமே செய்ய முடிந்தது. இதைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு நாட்கள் காலை கல்லூரிக்குச் சென்றுவிட்டு மதியம் வந்த பிறகு நடவு பணியைத் தொடங்குவேன். மூன்று நாட்களில் ஒரு ஏக்கர் நிலத்தையும் நட்டு முடித்தேன்.

அப்பா உடன் இருந்து மற்ற வேலைகளை செய்ததோடு, உற்சாகமூட்டினார். இதே மாதிரி தன்னம்பிக்கையோடு இரு என அம்மாவும் அருகில் இருந்தவர்களும் பாராட்டி வாழ்த்தினர்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்