பூட்டிய வீட்டில் மனைவி மற்றும் தாயுடன் சடலமாக கிடந்த செய்தியாளர்

Report Print Vijay Amburore in இந்தியா

சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வேலை செய்து வரும் செய்தியாளர் ஒருவர், பூட்டிய வீட்டினுள் மனைவி மற்றும் தாயுடன் இறந்து கிடந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த பிரசன்னா தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அர்ச்சனா ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

பிரசன்னா தன்னுடைய மனைவி அர்ச்சனா மற்றும் தாய் ரேவதியுடன் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல மூன்று பேரும் உறங்க சென்றுள்ளனர்.

இன்று காலை விடிந்து நீண்ட நேரமாகியும் அவருடைய வீடு திறக்கப்படவில்லை. அப்பகுதி வழியாக சென்ற சிலர் வீட்டில் இருந்து புகை வருவதை பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போது ஒரே புகைமூட்டமாக இருந்துள்ளது.

வீட்டிற்குள் பிரசன்னா, அர்ச்சனா, ரேவதி ஆகியோர் இறந்து கிடந்தனர். வீட்டில் ஃப்ரிட்ஜ் மற்றும் வயர்கள் எரிந்த நிலையில் கிடந்ததால், மின்கசிவு ஏற்பட்டு ஃப்ரிட்ஜ் வெடித்து சிதறியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்