வெளிநாட்டில் வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட தமிழ் பெண்கள்

Report Print Vijay Amburore in இந்தியா

துபாயில் வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட தமிழக பெண்கள் இரண்டு பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மனைவி வீரம்மாள் (28). இந்த தம்பதியினருக்கு 14 வயதில் மகள் உள்ளார். ராதாகிருஷ்ணன் வேலை இல்லாமல் வீட்டில் இருந்ததால், குடும்பத்தை வறுமை சோதித்து பார்த்துள்ளது.

இந்த நேரத்தில் வீரம்மாளை தொடர்பு கொண்ட ஒரு பெண் ஏஜென்ட், துபாயில் சமையல் வேலை வாங்கி தருகிறேன். கைநிறைய சம்பளம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

அதில் மயங்கிய வீரம்மாள் சுற்றுலா விசாவில் அவருடன் துபாய்க்கு சென்றுள்ளார். அங்கு பல்வேறு வீடுகளில் வேலை செய்த வீரம்மாள் மாதம் 900 திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் 17 ஆயிரம் ரூபாய்) சம்பளமாக பெற்றுள்ளார்.

வீரம்மாளின் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொண்ட பெண் ஏஜென்ட், தினமும் காலை 3 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை வேலை செய்யுமாறு கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் உடல்நிலை சரியில்லாமல் போன வீரம்மாளை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து வேலை செய்ய வற்புறுத்தி வந்துள்ளார்.

அங்கு ஒரு வீட்டினுள் பல பெண்களுடன் சேர்த்து வீரம்மாளையும் அடைத்து வைத்து சித்ரவதை செய்ய ஆரம்பித்துள்ளார். இதற்கிடையில் இந்திய ஓட்டுநர் ஒருவரின் உதவியுடன் அங்கிருந்து தப்பிய வீரம்மாள், இந்திய தூதரகத்தில் தஞ்சம் புகுந்து தனக்கு நடந்த கொடுமை பற்றி கூறியுள்ளார்.

தூதரக அதிகாரி ஸ்மிதா பாண்ட் தலைமையிலான குழு வீரம்மாளுக்கு தேவையான உதவிகளை செய்தனர். இந்த சம்பவம் அறிந்த ஏஜென்ட் அங்கிருந்து தப்பி தமிழகத்திற்கு தப்பி ஓடிவந்துள்ளார். அவரை கண்டுபிடிப்பதற்கான வேலைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோன்று பாதிக்கப்பட்ட மற்ற பெண்களையும் மீட்க அமீரக அரசு உதவியை அதிகாரிகள் நாடியுள்ளனர்.

இந்த நிலையில் வீரம்மாளுடன் சேர்ந்து தமிழகத்தை சேர்ந்த லோகேஷ்வரி என்கிற பெண்ணும் மீட்கப்பட்டுள்ளனர். விரைவில் இருவரும் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்