தேச துரோக வழக்கில் தண்டிக்கப்பட்டவன் நான் தான்! வைகோ

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவில் தேச துரோக வழக்கில் தண்டிக்கப்பட்டவன் நான் தான் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் மத்திய அரசுக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதாக, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

அதன் பின்னர், கடந்த 2017ஆம் ஆண்டு சிறைக்கு அனுப்பப்பட்ட அவர், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், வைகோ மீதான தேச துரோக வழக்கு குற்றச்சாட்டு நிரூபணமானதைத் தொடர்ந்து, அவருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அபராதத்தை செலுத்திய வைகோ, தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தார். எனவே, அவரது ஓராண்டு சிறை தண்டனை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், திண்டுக்கல்லில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த வைகோ கூறுகையில், ‘என் மீது தேச துரோக வழக்கில் கடந்த 5ஆம் திகதி தண்டனை விதிக்கப்பட்டு, ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்தியாவில் பொடோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் எம்.பி நான் தான்.

அதே போல் தேச துரோக வழக்கிலும் தண்டிக்கப்பட்டவன் நான் தான். கடந்த 5ஆம் திகதி தண்டனை விதிக்கப்பட்ட பிறகு, அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினை சந்தித்து, ஒரு வேளை எனது மனு நிராகரிக்கப்பட்டால் மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ளுமாறு கூறினேன். அதன்படியே, தி.மு.க சார்பில் என்.ஆர்.இளங்கோ மனு தாக்கல் செய்துள்ளார்.

எனது மனு ஏற்றுக் கொள்வது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் கருத்து கேட்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறும்போது என்னால் கலந்துகொள்ள முடியாது. ஏன் என்றால் நாளை அதே நீதிமன்றத்தில் மற்றொரு வழக்குக்காக நான் ஆஜராக வேண்டியுள்ளது.

எனது சார்பில் வழக்கறிஞர் தேவதாஸ் கலந்துகொள்வார். எனது மனு ஏற்கப்பட்டால் தி.மு.க வேட்பாளர் இளங்கோ தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வார்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்