நடிகர் சூர்யாவுக்கு நாம் தமிழர் ஆதரவு..! பாஜக-அதிமுக.வுக்கு சவால்: கொந்தளித்த சீமான்

Report Print Basu in இந்தியா

சூர்யாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக-அதிமுக தலைவர்கள் புதிய கல்விக்கொள்கைக் குறித்து பொது மேடையில் விவாதிக்கத் தயாரா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்; புதிய கல்விக்கொள்கை வரைவு தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய தம்பி சூர்யா, புதிய கல்விக்கொள்கை குறித்துப் பேசி அதிலுள்ள ஆபத்துகளைச் சுட்டிக்காட்டி, அது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லையென்று தனது ஆதங்கத்தைக் கொட்டினார். 30 கோடி மாணவர்களின் கல்வியுரிமையைப் புதிய கல்விக் கொள்கையின் மூலம் பலிகொடுத்துவிடக் கூடாது என்ற தனது இனமான கோபத்தை அறச்சீற்றமாக வெளிப்படுத்தினார். அவர் கூறிய கருத்துக்கள் அனைத்தும் சிந்திக்கத்தக்கது. நியாயமானது. அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.

புதிய கல்விக் கொள்கை குறித்து மக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க வரும் ஜூலை 25 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதனைக் கடைக்கோடி மக்களுக்கும் தெரியப்படுத்தி விழிப்புணர்வூட்ட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலேயே அவர் இதனைப் பேசியிருக்கிறார். புதிய கல்விக் கொள்கை குறித்து இளைஞர்களிடையே மீண்டும் ஒரு விவாதம் தலையெடுக்க அவரது உணர்வும், உண்மையும் கலந்த பேச்சு ஒரு காரணமாக அமைந்திருக்கிறது. சூர்யாவின் இக்கருத்தை கருத்தால் வெல்ல முடியாத பாஜகவின் தலைவர்களும், அதிமுக அமைச்சர் பெருமக்களும் வழமைபோலத் தனிப்பட்ட முறையில் தாக்குதல் தொடுக்க முற்படுவதும், கருத்துரிமையையே கேள்விக்கு உள்ளாக்குவதுமானச் செயல்களில் ஈடுபடுவதும் வன்மையான கண்டனத்திற்குரியது.

தம்பி சூர்யாவின் கருத்தைக் கொச்சைப்படுத்தி மடைமாற்ற முயன்று, புதிய கல்விக் கொள்கையைப் புனிதமான கல்விக் கொள்கை போலச் சித்தரித்துத் தம்பி சூர்யாவின் கருத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் பாஜக தலைவர்கள், அதிமுகவின் அமைச்சர்கள் அக்கல்வி கொள்கை குறித்துப் பொது மேடையில் மக்கள் முன்னிலையில் விவாதிக்கத் தயாரா என்பதுதான் நாங்கள் எழுப்புகிற கேள்வி. அவ்வாறு பொதுமக்கள் முன்னால் புதிய கல்விக் கொள்கை பற்றிய விவாதத்தை மேற்கொள்ள வக்கற்ற இவர்கள், இந்திய அரசியலமைப்புச் சாசனம் வழங்கி இருக்கிற அடிப்படை உரிமையான கருத்துரிமையையே நசுக்கும் வகையில் சூர்யாவின் பேச்சுக்கு உள்நோக்கம் கற்பிப்பதும், அவரைத் தனிப்பட்ட முறையில் வசைபாடுவதும் ஏற்புடையது அன்று! அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

புதிய கல்விக் கொள்கை குறித்தானத் தம்பி சூர்யாவின் கருத்துக்கு நாம் தமிழர் கட்சி துணையாக நின்று புதிய கல்விக் கொள்கை குறித்துக் கருத்தியல் பரப்புரையும், மிகப்பெரும் களப்பணியும் செய்து அதற்கெதிரான தொடர் முன்னெடுப்புகளைக் கையிலெடுத்து மக்களின் துணையோடு போராடி மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் இப்புதிய கல்விக் கொள்கையை நாம் தமிழர் கட்சி முறியடிக்கும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers