வைகோ மீதான தேசத்துரோக வழக்கில் சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு

Report Print Vijay Amburore in இந்தியா

தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ மீது விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு, சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய வைகோ, விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும் அவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் கடந்த 5ம் திகதியன்று தீர்ப்பளித்தது.

உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர், சிறைத்தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த நிலையில் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி, இனி தேசத்திற்கு எதிராக பேசக் கூடாது என்றும், பேசும் முன்னர் யோசித்து பேச வேண்டும் என்றும் வைகோவிற்கு அறிவுறுத்தினார்.

மேலும், விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை, விசாரணை முடியும் வரை நிறுத்தி வைப்பதாக அறிவித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக 4 வாரத்தில், பதிலளிக்குமாறு சென்னை ஆயிரம் விளக்கு காவல்நிலையப் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்