பள்ளியில் நடந்த பயங்கரம்: மாணவர்களின் கண்முன்னே குத்திகொல்லப்பட்ட ஆசிரியை

Report Print Vijay Amburore in இந்தியா

மதுரையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியையை அவருடைய கணவர் மாணவர்களின் கண்முன் வைத்தே கொடூரமாக குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரத்தை சேர்ந்த பொறியாளர் குருமுனீஸ்வரன், மதுரையை சேர்ந்த ரதிதேவி என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

திருமணம் முடிந்ததிலிருந்தே தம்பதியினருக்குள் அடிக்கடி சண்டை ஏற்படுவதும், உறவினர்கள் பேச்சு வார்த்தை நடத்தி சேர்த்து வைப்பதும் வாடிக்கையாகவே இருந்து வந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன் மீண்டும் கணவன் மனைவிக்கு இடையில் சண்டை ஏற்பட்டு தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். குருமுனீஸ்வரன் சென்னையில் வேலை செய்து வருகிறார்.

ரதிதேவி மதுரையில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையில் நண்பர்கள் சிலர், ரதிதேவியின் நடவடிக்கைக்கு குறித்து தவறாக கூறியுள்ளனர். அதனை நம்பிய குருமுனீஸ்வரனும் மனைவி மீது கடும் ஆத்திரமடைந்துளான்.

இந்த நிலையில் இன்று பள்ளி நடந்து கொண்டிருக்கும் போது ஹெல்மட் உடன் ரதிதேவியின் வகுப்பறைக்குள் நுழைந்த குருமுனீஸ்வரன், "உங்க டீச்சரை நான் இப்போ கொல்லப்போறேன்" எனக்கூறிக்கொண்டே மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளான். இரத்த வெள்ளத்தில் மயங்கிய ரதிதேவி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர்கள் சிதறியடித்து ஓடியுள்ளனர். அங்கிருந்து தப்ப முயன்ற குருமுனீஸ்வரனை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சுற்றிவளைத்து பிடித்தனர்.

கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்ட போது, தன்னிடம் இருந்து குழந்தைகளை பிரித்துக்கொண்டு தனியாக வாழ்ந்ததாலே கொன்றதாக கூறியுள்ளான்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்