குழந்தைகளுக்கு கழிவறையில் சமைக்கப்பட்ட உணவு! பெண் அமைச்சரின் விளக்கத்தால் வெடித்த சர்ச்சை

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி மையம் ஒன்றில், கழிவறையில் உணவு சமைக்கப்பட்ட உணவால் பாதிப்பு ஏற்படாது என்று அம்மாநில அமைச்சர் விளக்கம் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில், கழிவறையே சமையல் அறையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சமைக்கப்படும் உணவு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியானதால் இந்த விடயம், அங்குள்ள ஊடங்களில் செய்தியாக வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, மத்திய பிரதேசத்தின் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் இமார்தி தேவி தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘வீட்டில் குளியல் அறையுடன் கழிவறை இணைந்து இருந்தால் உறவினர்கள் உங்கள் வீட்டில் உணவு அருந்த மறுப்பார்களா? குளியல் அறையில் பாத்திரங்கள் வைக்கலாம். நாம் கூட நமது வீடுகளில் பாத்திரங்களை வைத்திருக்கிறோம்.

அந்த அங்கன்வாடி மையத்தில் கழிவறைக்கும், ஸ்டவ்வுக்கும் இடையே இடைவெளி உள்ளது. எனவே, கழிவறைக்குள் சமைப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது. இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என தெரிவித்துள்ளார்.

இவரது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து மாவட்ட அதிகாரி கூறுகையில், நல்ல முறையில் சமையல் அறை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதில் சம்பந்தப்பட்ட அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்