நூறு ஆண்டுகளை கடந்த தாராவியுடனான தமிழர்களின் பந்தம்!

Report Print Kabilan in இந்தியா

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதிகளில் ஒன்றான தாராவியில், சுமார் 100 ஆண்டுகளை கடந்து வாழ்ந்து வரும் தமிழர்கள் குறித்து காண்போம்.

இந்தியாவின் மிக முக்கியமான நகரமான மும்பையில் உள்ள பகுதி தாராவி. தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியான தாராவி, பல திரைப்படங்களில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இங்கு 7 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.

ஆரம்பத்தில் இங்கு தமிழர்கள் புலம்பெயர, நகரின் முக்கிய பகுதியில் அமைந்திருப்பது, நகரின் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல போதுமான போக்குவரத்து வசதி இருப்பதும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.

தாராவிக்கும், தமிழர்களுக்கும் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு மேலான பந்தம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் தமிழகத்தில் இருந்து, குறிப்பாக தென் தமிழகத்தில் இருந்து தமிழர்கள் இங்கு புலம்பெயர்ந்தனர். பின்னர், 1950-70 கால கட்டத்தில் ஏராளமான தமிழர்கள் இங்கு வர ஆரம்பித்தனர்.

காலப்போக்கில் இங்கிருந்து சிலர் நகரின் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தாலும், இந்த பகுதியில் இன்னமும் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இங்கு வாழும் தமிழர்களின் பிரச்சனை என்னவென்றால், படித்த இளைஞர்களுக்கு அரசு பணி கிடைப்பதில்லை.

தாராவியில் பொது கழிப்பறைகள் இரவு 10 மணிக்குள் மூடப்பட்டுவிடும். பல வீடுகளில் தனி கழிப்பறைகள் இல்லாததால், இரவில் பெண்கள் சிரமங்களை சந்திப்பதாக இங்குள்ள மக்கள் கூறுகின்றனர். எனினும், இங்குள்ள சிறு தொழிற்சாலைகளில் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் மற்றும் சகாய விலையில் கிடைக்கும் உணவு பொருட்கள் ஆகியவை மக்களை தொடர்ந்து இங்கேயே இருக்க வைக்கிறது.

இங்கு பிறந்து வளர்ந்த மக்கள் இது எங்கள் பூமி என்கிறார்கள். எனவே, இவர்கள் வேறு எங்கும் செல்வதற்கு தயாராக இல்லை. அதே சமயம் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகையால் தாராவி திணறி வருகிறது. அத்துடன் சுகாதார பிரச்சனை, மழை காலங்களில் வீடுகளுக்குள் புகுந்துவிடும் மழை நீர் மற்றும் வழிந்தோடும் கழிவு நீர் ஆகியவை பெரும் பிரச்சனையாக உள்ளது.

மேலும், சட்ட விரோதமான காரியங்கள் இங்கு அதிகளவில் நடப்பதாக கூறப்படுவது குறித்து, 30 ஆண்டுகளாக தாராவியில் வாழ்ந்த நபர் ஒருவர் தெரிவிக்கையில், ‘மிகப்பெரிய பகுதி இது. பல லட்சம் மக்கள், பல மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். அதனால் ஓரிரு சம்பவங்கள் முன்பு இங்கு வாழ்ந்த சிலரின் பின்னணி ஆகியவற்றை வைத்து மட்டும், இந்த பகுதியை குற்றபூமியாக வர்ணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்கிறார்.

தாராவியின் கலாச்சாரம் மற்றும் நாகரீகம் ஆகியவை மும்பையை ஒத்து இல்லையென்றாலும், இப்பகுதி பெண்களுக்கு பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது. இதுவும் இப்பகுதியை விட்டு வெளியேறாமல் இருப்பதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

எனினும், தாராவி வீடுகள் சீரமைப்பு திட்டம் என்ற இங்குள்ள குடிசை வீடுகளை மற்றும் பழைய வீடுகளை அப்புறப்படுத்தி, மாற்று வீடுகள் கட்டித்தரும் அரசின் திட்டம் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்தாலும் அது செயல்பாட்டுக்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்