நிறுத்தாமல் சென்ற பேருந்து நடத்துனர்.. விசித்திர தண்டனை கொடுத்த ஆட்சியர்! குவியும் பாராட்டு

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பேருந்து நடத்துனரின் மீது எழுந்த அடுக்கடுக்கான புகார்களைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் வித்தியாசமான தண்டனை அளித்தார்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வாளிகடவு-பரப்பநங்கடி வழித்தடத்தில் தனியார் பேருந்து ஒன்று செல்கிறது. இந்தப் பேருந்து அந்தப் பகுதியின் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொள்வது இல்லை என்றும், அப்படியே ஏற்றினாலும் பள்ளியில் நிற்காமல் இரண்டு நிறுத்தங்கள் தள்ளிதான் இறக்கி விடப்படுகின்றனர் என்றும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

இதற்கிடையில், சமீபத்தில் வெங்காரா பகுதியில் அதே பேருந்தில் சில மாணவர்கள் ஏறியுள்ளனர். அப்போது அவர்களை நடத்துனர் ஷஹீர் தரக்குறைவாகப் பேசியுள்ளார். அத்துடன் பள்ளியிலும் இறக்கி விடாமல் இருந்துள்ளார்.

இச்சம்பவத்தை சிலர் பேஸ்புக்கில் பதிவிட்டதைத் தொடர்ந்து வைரலானது. அதனைத் தொடர்ந்து, கல்வித்துறை அமைச்சர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரை அறிவுறுத்தினார்.

உடனே இதுதொடர்பாக விசாரணை நடத்திய மலப்புரம் மாவட்ட ஆட்சியர் மாலிக், தவறு செய்த நடத்துனரின் மீது நடவடிக்கை எடுத்தார். ஆனால் வித்தியாசமான தண்டனை ஒன்றை அவருக்கு அளித்தார். அதாவது, அவர் ஆதரவற்ற குழந்தைகள் முகாமுக்கு ‘பராமரிப்பாளர்’ ஆக அனுப்பப்பட்டார்.

10 நாட்கள் அங்கு பராமரிப்பாளராக பணியாற்றி, அரசு குழந்தைகள் நல காப்பகம் அளிக்கும் சான்றிதழை நடத்துனர் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையிலேயே அவர் மீண்டும் தனது பணியை தொடர முடியும் என்று உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் மாலிக் கூறுகையில்,

‘தனியார் பேருந்து ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் மீதான தங்கள் பார்வையை மாற்ற வேண்டும் என்றே இப்படி ஒரு செயலை செய்தேன். சம்பந்தப்பட்ட அந்த நடத்துனர், அரசு காப்பகத்தில் குழந்தைகளுடன் பழகிய பிறகு அவர்களை புரிந்துகொண்டு நேசிக்கும் நபராக மாறியிருப்பார் என நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். மேலும், தவறு செய்த நடத்துனருக்கு தண்டனை கொடுக்காமல், அவரை ஆட்சியர் உணர்வுப்பூர்வமாக திருத்தியுள்ளார் என்று நெட்டிசன்களும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்