இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மழையில் மூழ்கிய தெரு ஒன்றில் சுற்றி வரும் முதலையின் காணொளி ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வியாபித்துள்ளது.
குஜராத்தின் வதோதரா நகரில் புதன்கிழமை முதல் தொடர் மழை கொட்டி வருகிறது. நகரமெங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
வெள்ளப்பெருக்கால் ஆற்றிலிருந்து அடித்துவரப்பட்ட முதலைகள் தெருக்களில் சுற்றித் திரிவது அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரில் இரண்டு தெரு நாய்கள் விளையாடிக்கொண்டிருக்கின்றன.
அப்போது, அதில் ஒரு நாயின் பின்புறமாக முதலை ஒன்று, தனக்கே உரிய பாணியில் மெதுவாக பின்தொடருகிறது.
சில விநாடிகள் காத்திருக்கும் அந்த முதலை, நீரிலிருந்து பாய்ந்து ஒரு நாயைக் கவ்வப் பாய்கிறது.
அதற்குள் சுதாரித்துக்கொண்ட அந்த நாய் லாவகமாக முதலையிடமிருந்து தப்பித்துக்கொண்டது.
இதைக்கண்டு சுற்றியிருக்கும் மக்கள், பதற்றத்தில் கூச்சல் எழுப்புகின்றனர். குஜராத்தில் மேலும் சில நாள்களுக்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தியிருக்கிறது.
ரயில் நிலையங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால், அம்மாநிலத்தில் 22-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.