காதலனை நம்பி சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்: தாயாருடன் இளைஞர் கைது

Report Print Arbin Arbin in இந்தியா
527Shares

தமிழகத்தில் கல்லூரி மாணவியை காதலித்து பின்னர் கொலை செய்த காதலன் அதை மறைத்து வேறு பெண்னை திருமணம் செய்தது தொடர்பாக 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பாண்டியின் மகள் முத்தரசி தனியார் கல்லூரியில் பி.எட். படித்து வந்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தனது சகோதரி வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்த முத்தரசிக்கு அப்பகுதியைச் சேர்ந்த சரக்கு வாகன சாரதியான பரத்துடன் காதல் மலர்ந்து, அதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் மாதம் முத்தரசி மாயமானார்.

இச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதன் பேரில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

முத்தரசியை பரத்துடன் பலமுறை பார்த்துள்ளதாக அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலை வைத்து, அவனைப் பிடித்து பொலிசார் விசாரித்துள்ளனர்.

தொடக்கத்தில் தனக்கு ஒன்றும் தெரியாது என கூறி வந்த இளைஞரிடம் பொலிசார் தங்கள் பாணியில் விசாரிக்கவே பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

முத்தரசியை ஆத்துக்கால்புதூருக்கு அழைத்து வந்த பரத் விரைவில் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னுடைய பெற்றோருக்குத் தெரியாமல் தனியே வீடு எடுத்து தங்கவைத்துள்ளான்.

சில நாட்கள் கழிந்த நிலையில், பரத்துக்கு வேறு ஒரு இடத்தில் பெற்றோர் பெண் பார்த்துள்ளனர்.

புதுப்பெண்ணை திருமணம் செய்யும் ஆசையில், முத்தரசியை கைவிட பரத் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து அவருடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த பரத், ஒரு கட்டத்தில் முத்தரசியை தனியே அழைத்துச் சென்று தலையில் பலமாக அடித்துள்ளான்.

இதில் முத்தரசி உயிரிழந்துவிடவே, செய்வதறியாது தனது பெற்றோரிடம் கூறியுள்ளான்.

குடும்பத்தினரும் அவசர அவசரமாக முத்தரசியின் உடலை வீட்டுக்குப் பின்புறம் குழிதோண்டி புதைத்துள்ளனர்.

சில நாட்கள் கழிந்த நிலையில், திருமணம் நடைபெறவுள்ள வீட்டில் பிணம் இருப்பது சரியல்ல என்று கருதி, அதனை மீண்டும் தோண்டியெடுத்து வேறு ஒரு இடத்துக்கு எடுத்துச் சென்று எரித்துவிட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் பெற்றோர் பார்த்த பெண்ணுடன் பரத்துக்கு திருமணமும் நடந்துள்ளது. விசாரணையில் இந்த உண்மைகள் வெளிவந்ததை அடுத்து, பரத், அவனது தாய் லட்சுமி மற்றும் உடலை எரிக்க உதவியதாக கோவிந்தன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பரத்தின் தந்தை உள்ளிட்ட மூவர் தேடப்பட்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்