காஷ்மீர் விவகாரத்தால் பயங்கரவாத எச்சரிக்கை..! தமிழகம் முழுவதும் பொலிசார் அதிரடி சோதனை

Report Print Kabilan in இந்தியா

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் காரணமாக சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் நடைபெறாமல் இருக்க, தமிழகம் முழுவதும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 35ஏ, 370 ஆகிய சட்டப் பிரிவுகள் ரத்து செய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.

இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஜம்மு-காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவுவதால், அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் பயங்கரவாத அசம்பாவித சம்பவங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் நடைபெறாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பை பலப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தமிழகம் முழுவதும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சேலம், கோவை, திருப்பூர் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில் ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி சங்கர் ஜிவால் தலைமையிலும், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் எல்லைகளை உள்ளடக்கிய பகுதியில் ஏ.டி.ஜி.பி அபய்குமார் சிங் தலைமையிலும் பொலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் திருச்சி, காஞ்சீபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கோயில்கள் என பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் நேற்றிரவு முதல் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பொது இடங்களில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரியும் நபர்களை பிடித்து பொலிசார் விசாரணை செய்கின்றனர். இந்த திடீர் சோதனையால் அச்சமடையும் மக்களுக்கு, அசம்பாவிதங்களை தடுக்கவே இந்த சோதனை நடத்தப்படுவதாக பொலிசார் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்