திருமணமான இளம்பெண் மீது மோகம்.. சென்னை கோடீஸ்வரர் கொலை வழக்கில் வெளியான பின்னணி தகவல்கள்!

Report Print Kabilan in இந்தியா

சென்னை கோடீஸ்வரர் சுரேஷ் பரத்வாஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண் வழக்கறிஞரிடம் பழக்கம் ஏற்பட்டது குறித்த பின்னணி தகவல்கள் தெரிய வந்துள்ளது.

அடையாறு இந்திரா நகரைச் சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ் பரத்வாஜ்(50), கடந்த ஜூன் 21ஆம் திகதி மாயமானார். அதனைத் தொடர்ந்து, பொலிசார் நடத்திய விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டது தெரிய வந்தது.

அதன் பின்னர், பெண் வழக்கறிஞரான பிரீத்தி என்பவர் தான் ஆட்களை வைத்து அவரை கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து, தேடுதல் வேட்டை நடத்திய பொலிசார் இந்திரா நகரில் பதுங்கி இருந்த அவரை நேற்றைய தினம் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், வீட்டு வேலை பார்த்து வந்த பெண் மீது ஆசை கொண்ட சுரேஷ் பரத்வாஜ், அவரை அடைவதற்காக பெண் வழக்கறிஞர் பிரீத்தியை நாடியுள்ளார். அவரிடம் சுமார் 65 லட்சம் வரை பணம் கொடுத்து ஏமாந்த சுரேஷ் பரத்வாஜ், தனது பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.

அதன் பின், பிரீத்தியின் ஆட்களான பிரகாஷ், சுரேஷ், மனோகர் ஆகிய நபர்கள், சுரேஷ் பரத்வாஜை கடலுக்கு அழைத்துச் சென்று கொலை செய்து கடலில் வீசியுள்ளனர் என்பது தெரிய வந்தது. இந்நிலையில், இந்த கொலை வழக்கு சம்பந்தமான அடுத்தகட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், சுரேஷ் பரத்வாஜின் வீட்டில் வேலை பார்த்து வந்த பெண்ணுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தான் சமீபத்தில் இருவரும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் பலரிடம் இந்த பஞ்சாயத்து சென்ற நிலையில் இறுதியாக பிரீத்தி விசாரித்துள்ளார். முதலில் பணத்தகராறு என்று பிரீத்தியிடம் கூறிய சுரேஷ் பரத்வாஜ், அதன் பின்னர் வேலைக்கார பெண் மீது தனக்கு ஆசை இருப்பதை தெரிவித்துள்ளார்.

அதன் பின்னரே சுரேஷ் பரத்வாஜின் நோக்கத்தை தெரிந்துகொண்ட பிரீத்தி, அவரிடம் பணம் பெற்று வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து தனது விருப்பம் நிறைவேறாததால் பணத்தை திருப்பி கேட்ட சுரேஷ் பரத்வாஜை ஆட்களை வைத்து வழக்கறிஞர் பிரீத்தி கொலை செய்துள்ளார்.

மேலும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் மகள் தான் பிரீத்தி என்பதும், அவரது சகோதரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரி தான் என்பதும் தெரிய வந்துள்ளது. அத்துடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரீத்தி பணியாற்றி வருகிறார் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட தொழிலதிபர் சுரேஷ் பரத்வாஜின் உடல் இன்னும் கிடைக்கவில்லை. எனவே, அவரது உடல் வேறு எங்காவது கரை ஒதுங்கியிருக்கலாம் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்