இலங்கை போரின் போது கலைஞர் உண்ணாவிரதம் இருந்தது உண்மையா? நீண்ட ஆண்டு ரகசியத்தை உடைத்த உதவியாளர்

Report Print Santhan in இந்தியா

இலங்கை போரை முடிவுக்கு கொண்டு வர கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது பற்றி அவருடைய உதவியாளர் நித்யா இப்போது கூறியுள்ளார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ஆம் திகதி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு வந்த அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி திடீரென்று இலங்கை போரை நிறுத்த வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தார்.

ஆனால் அப்போது கலைஞர் உண்ணாவிரதம் இருக்கவில்லை, இதெல்லாம் நடிப்பு என்று விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் கருணாநிதி உண்ணாவிரதம் முடிவை எடுத்த போது என்ன நடந்தது என்பதை அவரின் உதவியாளர் நித்யா தற்போது பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், அன்று காலை 06.30 மணியளவில் மணியளவில் என்னிடம் வந்து அவர், இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும். அதற்காக, அண்ணா நினைவிடத்திற்கு சென்று உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று கூறினார்.

நான் அவரின் இந்த திடீர் முடிவை எதிர்பார்க்கவேயில்லை, இதனால் நான் இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரிவிக்கிறேன் என்று அவரிடம் கூறிய போது, யாரிடமும் சொல்லாதேஉண்ணாவிரதத்துக்குச் செல்ல வேண்டாம் என மற்றவர்கள் தடுத்துவிடுவார்கள் என்று கூறினார்.

இதனால் அவரது முடிவை மாற்ற முடியாது என்பதால், அவரிடம் அப்போது நான் கோபித்து கொள்ளாதீங்க அய்யா, உண்ணாவிரதம் இருங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஒருநாள் முழுக்க உண்ணாவிரதம் இருக்கும் வகையில் உடல் தாங்க வேண்டும். இரண்டு இட்லியையாவது சாப்பிட்டுவிட்டுப் செல்லுங்கள் என்றேன்.

உடனே அவர் என் மீது கோபப்பட்டு, என்னை நடிக்க சொல்கிறாயா? இட்லி சாப்பிட்டு உண்ணாவிரதம் இருந்து மக்களை ஏமாற்றச் சொல்கிறாயா என்று கோபப்பட்டார்.

தண்ணீர்கூட குடிக்காமல் ஏழு மணிநேரம் அவர் அன்று உண்ணாவிரதம் இருந்தார். அதன் பின் டெல்லியிலிருந்து போர் நிறுத்தம் தொடர்பாக அறிவிப்பு வந்த பிறகே கோபாலபுரம் வந்து மதியம் 3 மணிக்குத்தான் உணவைச் சாப்பிட்டார்.

கலைஞர் இலங்கைத் தமிழ் மக்களுக்காக கடைசிவரையில் உண்மையாக இருந்தார். ஈழ மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியால் மிகுந்த மனவேதனையில் இருந்தார். சிலர் விமர்சனம் செய்தபோதுகூட, ` ஒரு தலைவருக்கு நல்ல விமர்சனங்களும் வரும், கெட்ட விமர்சனங்களும் வரும் என்று எடுத்துக் கொண்டதாக அவர் கூறி முடித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்