துளைத்த 13 பெல்லட் குண்டுகள்... துரத்திய எல்லை ராணுவம்: காஷ்மீரில் பலியான சிறுவன்

Report Print Arbin Arbin in இந்தியா

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்தும் செய்யும் 370 தடை மசோதா தாக்கல் செய்யப்பட்ட அதேநாளில் நிகழ்ந்த ஒரு சோகமான சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஸ்ரீநகர் பல்போரா பகுதியைச் சேர்ந்த ஒசைப் அல்டஃப் என்ற 17 வயதுச் சிறுவன் கடந்த 5 ஆம் திகதி தன் நண்பர்களுடன் இணைந்து அருகில் உள்ள மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த சில எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் விளையாடிய சிறுவர்களைத் துரத்தியுள்ளனர். வீரர்களுக்குப் பயந்து சிறுவர்கள் ஓடியுள்ளனர். அருகிலிருந்த ஆற்றுப் பாலத்தின் மீது ஓடும்போது பாலத்தின் இரண்டு திசையிலும் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் மறித்துள்ளனர்.

இதனால் என்ன செய்வதெனத் தெரியாமல் திகைத்த சிறுவர்கள் ஆற்றில் குதித்துள்ளனர்.

அவர்களில் 2 பேரை மணல் அள்ளும் தொழிலாளர்கள் காப்பாற்றியுள்ளனர். சிறிது நேரத்துக்குப் பிறகு ஒசைப் அல்டஃப்பின் உடல் மட்டும் ஆற்றோரத்தில் மிதந்துள்ளது.

இந்தச் சம்பவத்தை அடுத்து காப்பாற்றப்பட்ட இரண்டு சிறுவர்களும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதே மருத்துவமனையில் உயிரிழந்த சிறுவனின் பிரேதப் பரிசோதனையும் நடைபெற்றது. பரிசோதனை முடிவில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒசைப்பின் உடலில் 13 பெல்லட் குண்டுகளின் காயங்கள் இருந்ததாகவும் பெரும்பாலான காயங்கள் கண்களுக்கு அருகிலிருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அங்குள்ள மருத்துவர்கள், அரசு மற்றும் பாதுகாப்புப் படைகள் குறித்த வன்முறைச் சம்பவங்கள் பற்றி ஊடகத்தினரிடம் பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தனியார் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறுவன் உயிரிழப்பு குறித்துப் பேசிய அவரது தந்தை முகமது அல்டஃப் மஸாரி, பாதுகாப்புப் படை வீரர்களால் சுற்றிவளைக்கப்பட்ட என் மகன் வேறு வழியின்றி ஆற்றில் குதித்துள்ளான்.

அவனுக்கு நீந்தத் தெரியாது. அதனால் 20 நிமிடங்கள் போராடிவிட்டு உயிரிழந்துவிட்டான்.

காஷ்மீரில் 370 சிறப்புச் சட்டம் ரத்து செய்யப்படவுள்ளது உள்பட எந்த விஷயமும் என் மகனுக்குத் தெரியாது. அவன் விளையாடச் செல்லும்போது எங்கள் பகுதியில் தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.

ஒசைப் 11-ம் வகுப்புதான் படிக்கிறான். கிரிக்கெட் மீது அதிகக் காதல் கொண்டவன்.

சட்டப்பிரிவை ரத்து செய்தற்கு முன்னதாகவே ஸ்ரீநகரில் தொலைக்காட்சி, ரேடியோ போன்றவை துண்டிக்கப்பட்டன.

அதனால் இந்திய அரசின் அறிவிப்பு பற்றி எங்களுக்கே தெரியாது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதா என்பது தெரியவில்லை. என் மகனின் இறப்புக்கு நீதி கிடைக்கும் என்பதில் நம்பிக்கையும் இல்லை எனக் கண்ணீருடன் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்