தரையிறங்கும் நிலையில் இயங்காத விமான சக்கரங்கள்: 143 பேர் உயிர் தப்பியது எப்படி?

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த நிலையில் விமானத்தின் சக்கரங்கள் திடீரென இயங்காமல் போனதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் நேற்று இரவு 138 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்கள் உள்பட 143 பேருடன் நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.

சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க தயாரானது. தரை இறங்குவதற்கு முன்னதாக ஓடு பாதையில் ஓட வேண்டிய விமானத்தின் சக்கரங்கள் சரியாக செயல்படுகிறதா என விமானி வழக்கம் போல் பரிசோதித்துள்ளார்.

அப்போது விமானத்தின் சக்கரங்கள் இயங்காமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இந்நிலையில், விமானம் தரையிறங்க முடியாது என்பதால் விமானத்தை தொடர்ந்து வானில் வட்டமடிக்கச் செய்தார்.

அதோடு விமானத்தில் இருந்த விமான பொறியாளர் மற்றும் விமானி சேர்ந்து அந்த விமானத்தின் சக்கரங்களை இயங்க வைக்க முயற்சி செய்தனர்.

விமானம் சுமார் அரைமணிநேரம் வானில் பறந்தும் முயற்சி வெற்றி பெறவில்லை.

இந்நிலையில், விமானத்தை சென்னையில் தகுந்த பாதுகாப்புடன் அவசரமாக தரையிறக்குவதை தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தனர்.

இதனையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானம் அவசரமாக தரையிறங்க முழு பாதுகாப்பு ஏற்பாடுகளை துரிதமாக செய்ய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

விமான ஓடு பாதையில் தீயணைப்பு வண்டிகள், மருத்துவ குழுவினர், அதிரடி படை வீரர்கள் என நிறுத்தப்பட்டனர்.

அதன் பின்னர் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையினர் விமானம் தரையிறங்க தகவல் கொடுத்தனர்.

நேற்று அதிகாலை 1.10 மணிக்கு விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க தொடங்கியபோது திடீர் என எதிர்பாராமல் விமானத்தின் இயங்காத சக்கரங்கள் திடீர் என இயங்கத் தொடங்கின.

இதனால் தரையிறங்கும் போது எந்த வித ஆபத்தும் இன்றி விமானம் சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. விமானத்தில் இருந்த 143 பேரும் அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் உயிர் தப்பினர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers