9 மாத குழந்தையை சீரழித்தவனுக்கு 48 நாட்களில் மரண தண்டனை விதித்து நீதிபதி அதிரடி

Report Print Vijay Amburore in இந்தியா

தெலுங்கானா மாநிலத்தில் 9 மாத கைக்குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற குற்றவாளிக்கு 48 நாட்களில் மரண தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் 9 மாத பெண் குழந்தை ஒன்று கடந்த ஜூன் 19ம் திகதியன்று தன்னுடைய பெற்றோர் மற்றும் தாத்தா - பாட்டியுடன் மொட்டை மாடியில் உறங்கிக்கொண்டிருந்துள்ளது.

அதிகாலை 2.30 மணிக்கு குழந்தை மாயமாகியிருப்பதை பெற்றோர் கவனித்து தேட ஆரம்பித்துள்ளனர். அப்போது கோலிபகா பிரவீன் (28) என்கிற இளைஞர் குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடியதை நேரில் பார்த்ததாக ஒருவர் கூறியுள்ளார்.

அவர் கூறிய பகுதிக்கு சென்ற பெற்றோர் குழந்தையின் கழுத்தை பிரவீன் நெரித்துக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே பிரவீனுக்கு தர்ம அடி கொடுத்து உள்ளூர் பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும், குழந்தையை வேகமாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் போராட்டம் நடத்த ஆரம்பித்தனர்.

பொலிஸாரும் இந்த வழக்கில் தீவிரம் காட்டி விசாரிக்க ஆரம்பித்தனர். பொலிஸார் விசாரணையில் பேசிய பிரவீன், அதிகாலை குழந்தையை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், அதன்பிறகு கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

21 நாட்களில் பொலிஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜெயக்குமார் சம்பவம் நடந்த 48 நாட்களில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். ஏனெனில் அந்த மாவட்டத்திலிருந்து குற்றவாளிக்கு ஆதரவாக எந்த ஒரு வழக்கறிஞரும் ஆஜராக முன்வரவில்லை. இந்த வழக்கில் 30 சாட்சிகளை நீதிபதி விசாரித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்