நடிப்பவர்களுக்கு காஷ்மீர் பற்றி என்ன தெரியும்? விஜய் சேதுபதியை விமர்சித்த தமிழிசை

Report Print Kabilan in இந்தியா

திரைப்படங்களில் நடிப்பவர்களுக்கு காஷ்மீர் பிரச்சனை பற்றி என்ன தெரியும்? என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் பிரமுகர்கள் தவிர, திரைப்பிரபலங்களும் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஜய்சேதுபதியும் காஷ்மீர் பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

காஷ்மீர் விவகாரம் குறித்து பெரியார் அன்றே கருத்து கூறிவிட்டார். அடுத்தவர் வீட்டு பிரச்சனையில் மற்றொருவர் தலையிட முடியாது. தலையிட கூடாது. பக்கத்து வீட்டார் மீது அக்கறை செலுத்தலாம்; ஆளுமை செலுத்தக் கூடாது என்று பெரியார் கூறியதை குறிப்பிட்டு தெரிவித்தார்.

இந்நிலையில், விஜய்சேதுபதியை விமர்சிக்கும் வகையில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், ‘காஷ்மீர் பற்றி சிலர் தவறாக கருத்து கூறுகிறார்கள். திரைப்படத்தில் நடிப்பவர்களுக்கு காஷ்மீர் பிரச்சனை பற்றி என்ன தெரியும்? காஷ்மீரை பற்றி ஒன்றுமே தெரியாத நபர்கள் எல்லாம் கருத்து கூறுகிறார்கள். பெரியார் பற்றி எல்லாம் தேவையில்லாமல் எடுத்துக்காட்டு கூறுகிறார்கள்.

அவர்கள் திரைப்படத்தில் மட்டும் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். காஷ்மீரில் இந்தியா செய்த நடவடிக்கையை பல கோடி பேர் வரவேற்று இருக்கிறார்கள். உலக தலைவர்கள் பலர் இந்த நடவடிக்கையை வரவேற்று இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது நடிகர்கள் கொஞ்சம் அமைதி காப்பதே நல்லது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers