இலங்கை பிரச்சனையிலும் ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்க வேண்டும்! தமிழக எம்.பி

Report Print Kabilan in இந்தியா

காஷ்மீர் விவகாரத்தில் கருத்து கூறியதைப் போல நீட், நெக்ஸ்ட், இலங்கை பிரச்சனைகளிலும் ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசியபோது, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை பாராட்டியிருந்தார். அவரது கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் உலாவுகின்றன.

இந்நிலையில் சிவகங்கை எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரத்தின் மகனுமான கார்த்திக் சிதம்பரம், தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் காஷ்மீர் விவகாரத்தில் ரஜினிகாந்த் கருத்து கூறியதை விமர்சித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘தற்போது விவாதம் செய்யப்படும் காஷ்மீர் விவகாரம் குறித்து நடிகர் ரஜினி கருத்து கூறியுள்ளார். அதேபோல் மாணவர்களுக்கு பெரும் இடியாக இருக்கும் நெக்ஸ்ட், நீட் தேர்வு, இலங்கை பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் அவர் கருத்து தெரிவிக்க வேண்டும்.

அரசியலில் இறங்க உள்ளதாக தெரிவித்து வரும் ரஜினி, குறிப்பிட்ட சிலவற்றிற்கு மட்டும் கருத்து கூறக் கூடாது. எல்லா விவகாரங்களிலும் கருத்து கூற வேண்டும். தற்போது ஆளும் மத்திய அரசு அதிகாரப்போக்குடன் செயல்படுகிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers