14 அறுவைசிகிச்சைகள்... சிறுநீரகம் பாதிப்பு: கேரள வெள்ள நிவாரணப் பணியில் கவனம் ஈர்த்த இளைஞர்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய மாநிலம் கேரளாவில் பெரு வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் மாநிலத்தின் மொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஷ்யாம் குமார் என்ற இளைஞர்.

திருவனந்தபுரம் மாவட்டம், பேயட் பகுதியைச் சேர்ந்தவர் ஷ்யாம் குமார் என்ற இளைஞர். இவர் தன் பகுதியில் உள்ள `பசுமை ஆர்மி' என்ற அமைப்பில் இணைந்து சமூக சேவைகளைச் செய்து வருகிறார்.

உளவியல் முதலாம் ஆண்டு படித்துவரும் ஷ்யாம் மற்ற இளைஞர்களைப்போல இயல்பானவர் கிடையாது.

இவருக்குப் பிறந்ததிலிருந்து சிறுநீரகப் பாதிப்பு இருந்து வந்துள்ளது. அதற்காக இதுவரை 14 அறுவை சிகிச்சைளைச் செய்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு மையத்தில் வேலை செய்துகொண்டிருக்கும்போது கேரள அமைச்சர் தாமஸ் ஐசக், ஷ்யாமை சந்தித்திருக்கிறார்.

இவரால்தான் ஷ்யாம் தற்போது வெளி உலகின் கவனத்துக்குத் தெரியவந்திருக்கிறார்.

ஷ்யாமுக்கு சிறுவயதிலேயே கால் சற்று மடங்கி உடைந்து இருந்துள்ளது. அதற்காக 10 வயதில் அறுவை சிகிச்சை செய்து செயற்கை மூட்டுகளைப் பொருத்தியுள்ளனர்.

இவருக்கு மூன்று கிட்னிகள் உள்ளன. இரண்டு கிட்னிகள் வலது புறத்தில், ஒன்றின் மேல் ஒன்றாக உள்ளன.

இதனால் மொத்த கிட்னியின் செயல்பாடும் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சைக்கிள், கால்பந்து எனச் சுற்றிவந்த அவரால் தற்போது நடப்பதே சற்று சிரமமாக உள்ளது. தற்போது 20 வயதாகும் ஷ்யாமுக்கு 3 வயது சிறுவனுக்கு இருக்கும் அளவே சிறுநீர்ப் பை உள்ளது.

அதனால் விரைவில் சிறுநீர் பை நிறைந்து வெளியேறிவிடும். இதற்காக தன்னுடன் ஒரு செயற்கை சிறுநீர்ப் பையை வைத்துக்கொண்டே வலம் வருகிறார் ஷ்யாம்.

தற்போது அவரது கிட்னி 23 சதவிகிதம் மட்டுமே வேலை செய்கிறது. அது 20 சதவிகிதமாகக் குறைந்ததால் அவருக்கு டயாலிசிஸ் செய்யவேண்டியிருக்கிறது.

ஒரு நாளுக்கு 30 மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் மட்டுமே அவரால் உயிர் வாழ முடியும்.

ஷ்யாமால் எந்தக் கடினமான வேலையையும் செய்ய முடியாது. திருவனந்தபுரம் பொருள்கள் சேகரிப்பு மையத்தில், பொருள்களைக் கட்டுவது, அங்கு நடக்கும் வேலைகளை மேற்பார்வையிடுவது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த ஒரு வாரமாக அங்கேயே இருந்துவருகிறார் ஷ்யாம். நள்ளிரவு 2 அல்லது 3 மணிக்கு தன் வீட்டுக்குச் செல்கிறார். அதுவும் தன் சிறுநீர்ப் பையைச் சுத்தம் செய்யச் சென்றுவிட்டு காலை 10 மணிக்கு மீண்டும் மையத்துக்கு வந்துவிடுகிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்