அரிவாளுடன் கொல்ல வந்த மர்ம நபர்கள்! எஜமானை காப்பாற்ற உயிரை விட்ட நாய்

Report Print Vijay Amburore in இந்தியா

மதுரையில் அரிவாளுடன் வந்த மர்ம நபர்களிடம் இருந்து எஜமானரை காப்பாற்றிவிட்டு வாயில்லா ஜீவன் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும், அதேபகுதியை சேர்ந்த அசோக் என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரத்தில் இருந்த அசோக், தன்னுடைய நண்பர்கள் 8 பேரை ஏற்பாடு செய்து முத்துக்குமாரை கொலை செய்ய அனுப்பி வைத்தனர்.

அதன்படி முகத்தில் துணியை கட்டிக்கொண்டு 8 மர்ம நபர்கள் முத்துக்குமார் வேலை செய்யும் இடத்திற்கு சென்றுள்ளனர். அந்த இடத்தில் நிறுவனத்தின் உரிமையாளர் செந்தில் என்பவருக்கும் மர்ம நபர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

உடனே கையில் வைத்திருந்த அரிவாளை கொண்டு செந்திலை வெட்டியுள்ளனர். கதறல் சத்தம் கேட்டு பதறிப்போய் ஓடிவந்த அவருடைய மனைவியையும் அந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளது.

இதற்கிடையில் அங்கு வந்த செந்திலின் வளர்ப்பு நாய் குரைத்துகொண்டே மர்ம நபர்கள் மீது பாய்ந்து தாக்க ஆரம்பித்தது.

ஆனால் இரக்கமில்லாத அந்த மிருகங்கள் வாயில்லா ஜீவனையும் கத்தியால் குத்தி கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார் காயமடைந்த தம்பதியினரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விஜய் (22), ஹரி (19), பிரவீன்பாலா (18), சிவா (19), ஜாகீர்உசேன் (19) மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் 2 பேர் என மொத்தம் 7 பேரை கைது செய்துள்ளனர். தப்பிச் சென்ற விக்னேஷ் என்பவரை தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்