நாட்டை உலுக்கிய ஆணவக் கொலை... 10 பேர் குற்றவாளிகள்: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் கேரள மாநிலத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதாக கூறி இளைஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயத்தில் நடந்த இந்த படுகொலையில், கொல்லப்பட்ட இளைஞரின் மாமனார் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.

மூன்று மாதத்தில் முடிக்கப்பட்ட இந்த வழக்கு விசாரணையில் தற்போது 10 பேர் குற்றவாளிகள் என மாவட்ட நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

கோட்டயம், தென்மல பகுதியில் சாக்கோ என்பவரின் மகள் நீனு தலித் கிறிஸ்தவரான கெவின் என்ற இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதில் ஆத்திரமடைந்த சாக்கோ தமது மகன் சானு, அவரது நண்பர்கள் சிலருடன் இந்த கொலையை திட்டமிட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்கள் மீது ஆட்கடத்தல், பேரம் பேசுதல், திட்டமிடுதல், வீடு புகுந்து தாக்குதல் உள்ளிட்ட 10 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டு, தற்போது மாவட்ட நீதிமன்றத்தில் நிரூபணமாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட நீனுவின் தந்தை அளித்த வாக்குமூலத்தில் இது ஆணவக் கொலை என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

கெவினின் சாதியே இந்த திருமணத்தை சாக்கோ எதிர்க்க முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

கெவின் கொல்லப்படுவதற்கு முன்பு, இந்த வழக்கில் தொடர்புடைய நியாஸ் என்பவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கெவின், தமது மனைவி நீனுவிடம் தொலைபேசியில் தெரிவித்ததும் நீதிமன்றத்தில் நிரூபணமானது.

இந்த கொலையை எவரும் நேரில் பார்த்ததில்லை என்பதால், கண்காணிப்பு கமெரா காட்சிகள், மற்றும் உடற்கூறு ஆய்வு தகவல்கள் உள்ளிட்டவை முக்கிய சாட்சியமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிகப்பட்டது.

ஆனால் கெவின் சம்பவத்தன்று மது போதையில் இருந்ததாகவும், சாக்கோவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் கொலை செய்து விடுவார்களோ என்ற பயத்தில் ஓடியதில் ஓடையில் தவறி விழுந்து இறந்ததாகவும் கூறப்பட்ட வாதம் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் சனிக்கிழமை மாவட்ட நீதிமன்றம் அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்