பணத்தை எல்லாம் அங்கு புதைத்து வைத்துவிட்டேன்! ஏன்? கொலையாளியின் பகீர் வாக்குமூலம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் டாஸ்மாக்கில் ஊழியரை கொலை செய்துவிட்டு, பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையன், பொலிஸ் விசாரணையில் நான் கார் வாங்க ஆசைப்பட்டே இந்த கொலையை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளான்.

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியை அடுத்துள்ள பேட்டப்பனூர் டாஸ்மாக் கடையில், திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்துள்ள மீனாட்சி மண்டபம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் விற்பனையாளராகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் 14-ஆம் திகதி இவர் விற்பனையை முடித்துவிட்டு, கடையை மூடும் சமயத்தில் மது வாங்குவது போல் வந்த கொள்ளையன் அவரை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு, டாஸ்மாக்கில் இருந்த 1.82 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டான்.

மறுநாள் காலையில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் ஜெகநாதன், வந்து பார்த்தபோது, ராஜா பிணமாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக பொலிசாருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த பொலிசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ஆகஸ்ட் 14-ஆம் திகதிக்கு அடுத்த நாள் சுதந்தர தினம் என்பதால், வழக்கத்தைவிட அன்றைய நாள் மது அதிகமாக விற்பனையாகும் என்பதை நன்கு அறிந்தே நபரே இந்த கொலையை செய்துள்ளான் என்பது மட்டும் பொலிசாருக்கு உறுதியாக தெரிந்திருந்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மூலமாக செகண்ட் சேல்ஸ் செய்யும் நபர்களின் பட்டியலை எடுத்து பொலிசார் விசாரிக்க ஆரம்பித்தனர்.

அதில், கடைசியாகக் காவலர்களின் சந்தேகப் பார்வையில் சிக்கியவர் நெல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம். அவரை அழைத்துவந்து விசாரணை செய்தபோது, எதுவுமே கொலைக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்ததால், பொலிசார் குழும்பி போய் இருந்தனர்.

அப்போது, சண்முகத்தை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விடும் மகன் அரவிந்தன் மீது பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அதுமட்டுமின்றி அரவிந்தன் கை, கால் மற்றும் கை கட்டை விரலில் அடிபட்டிருந்ததால், எப்படி இந்த அடிபட்டது என்று பொலிசார் விசாரித்த போது, வேலை செய்த இடத்தில் என்று கூறியுள்ளார்.

அதே சமயத்தில் சண்முகத்திடம் சரக்கு வாங்க யாரெல்லாம் கடைக்கு வருவீங்க என பொலிசார் கேட்க, பெரும்பாலும் நான்தான் வருவேன். சில சமயம் என் மகன் அரவிந்தன் வருவான் எனத் தெரிவித்துள்ளார்.

அதற்குள் அரவிந்தன் வேலை பார்க்கும் கடையில், அரவிந்தனுக்குக் கடையில் வேலை பார்க்கும்போது அடிபட்டது உண்மையா என விசாரித்த போது அதெல்லாம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இதனால் பொலிசார் விசாரணையை அரவிந்தன் பக்கம் முடக்கினர். அப்போது, அரவிந்தன் நான் எல்லா உண்மையையும் கூறிவிடுகிறேன், நான் தான் கொலை செய்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளான்.

அதில், ஆகஸ்ட் 14 -ஆம் திகதி இரவு 9.50 மணி இருக்கும், டாஸ்மாக் கடையில் விற்பனையாளர் ராஜா, விற்பனை முடிந்து பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் நான் மறைவான இடத்தில் என்னோட இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மறைந்திருந்தேன். அப்போது அங்கு வந்த கட்டட உரிமையாளர் இன்னும் கடையை மூடலையா என்று ராஜாவிடம் கேட்டுவிட்டு, அங்கிருந்து கிளம்பினார்.

அதன் பின் சுற்றும் முற்றும் பார்த்தேன், யாரும் இல்லை என்பதை அறிந்தவுடன், நேராக கடைக்கு சென்றேன். அங்கு அவரிடம், அண்ணே ரெண்டு பாக்ஸ் குவாட்டர் பாட்டில், ஒரு பாக்ஸ் பீர் பாட்டில் வேண்டும் என்று பணத்தைக் கொடுத்தேன்.

குவாட்டர் பாட்டில் எடுத்துக் கொடுத்துவிட்டார். ஆனால் பீர் பாட்டில் மட்டும் மேல இருக்கு என்று கூறியவரிடம், நீங்கள் இருங்க அண்ணா, நான் சென்று எடுக்கிறேன் என்று கூறிவிட்டு, உள்ளே சென்று பீர் பாக்ஸ் எடுப்பது போல் அவரை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தேன்.

அதன் பின் அன்றைக்கு வசூல் ஆன1.82 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு, நேராக எங்கள் ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருக்கும் இடத்துக்கு சென்று பணத்தைப் புதைத்து வைத்துவிட்டேன்,

ரத்தக் கரை படிந்த துணியை ஒரு பாறைக்கு மறைவில் வைத்துவிட்டு, வீட்டுக்கு சென்று வேறு துணி மாற்றிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

இவ்வளவு பணம் உனக்கு எதுக்கு என்று பொலிசார் கேட்ட போது, கார் வாங்க வேண்டும் என்ற ஆசையில் பணத்தை கொள்ளையடித்தேன் என்று கூற, அதன் பின் பொலிசார் அவன் பணம் புதைத்துவைத்திருந்த இடத்திற்கு சென்று பணம், கொலைக்குப் பயன்படுத்திய கத்தி, இருசக்கர வாகனம், ரத்தக் கரை படிந்த துணி, 1 ஆகியவற்றை மீட்டு, அரவிந்தனை சிறைக்கு அனுப்பினர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்