ரோட்டில் செருப்பு கடை வைத்துள்ள நபருக்கு லட்சக்கணக்கில் பணம் கிடைத்தது எப்படி? வெளியான உண்மை

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் சாலையில் செருப்பு கடை வைத்திருந்தவர் தன்னிடம் லட்சக்கணக்கில் பணம் எப்படி வந்தது என பொலிசில் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள சிட்டி யூனியன் வங்கி கிளை உள்ளது.

இந்த வங்கியில் ‘லோகி கேஸ் ஏஜென்சி’ நிறுவனத்தினர் பணம் பெற்று துறையூர் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பி வருகின்றனர்.

இந்நிறுவனத்தின் ஊழியர்களான சரவணன் (38), அருண் (33) ஆகியோர் கடந்த 20-ம் திகதி குறித்த வங்கிக்கு வந்து ரூ.16 லட்சத்தை பெற்று அதனை ஒரு பையில் வைத்தனர்.

தொடர்ந்து 2-வதாக ரூ.18 லட்சம் பெறும் முனைப்பில் ஊழியர்கள் இருந்தனர். அந்த நேரத்தில் ரூ.16 லட்சம் வைத்திருந்த பையை மர்மநபர் கொள்ளையடித்து தப்பி சென்றார்.

இது குறித்து பொலிசார் விசாரித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் ஒருவர் சிக்கினார்.

அவர் குடிபோதையில் ஆட்டோவில் பையுடன் சந்தேகத்துடன் சுற்றியதால் ஆட்டோ ஓட்டுனர் முருகையா என்பவர் பிடித்து அவரை பொலிசில் ஒப்படைத்தார்.

அவரிடம் விசாரித்ததில் தனது பெயர் ஸ்டீபன் (42) என கூறினார். அவரிடம் இருந்த பையில் ரூ.12 லட்சத்து 97 ஆயிரம் இருந்த நிலையில் இந்த பணம் வீட்டை விற்றதில் கிடைத்த பணம் என்று ஸ்டீபன் தெரிவித்தார்.

ஆனால் பொலிசாருக்கு அவர் மீது சந்தேகம் வலுத்ததால் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர். இதில் வங்கி பணத்தை கொள்ளையடித்ததை ஒப்பு கொண்டார்.

அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், சிட்டி யூனியன் வங்கி கிளை முன்பு நான் சாலையில் செருப்பு கடை போட்டிருந்தேன்.

அந்த நேரத்தில் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் வருவதை கவனித்துள்ளேன்.

இப்படி ஒரு மாதம் நோட்டமிட்டேன். சம்பவத்தன்றும் அவர்கள் 2 பேரும் பணத்தை வாங்கி ஒரு பையில் வைத்தனர்.

அப்போது நான் வங்கியில் இருந்து அந்த பையை எளிதில் தூக்கிக்கொண்டு வெளியே வந்துவிட்டேன்.

பின்னர் அந்த பணத்திலிருந்து ஒரு பகுதியை எடுத்து ஹொட்டலில் தங்கி மது அருந்தி சொகுசாக இருந்துவந்தேன் என கூறியுள்ளார். தொடர்ந்து பொலிசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்