விமானத்தில் கதறி அழுத பெண்... எங்கள் குழந்தைகள் சிறைப்பட்டுள்ளனர் என ராகுலிடம் கண்ணீர்விட்ட வீடியோ

Report Print Santhan in இந்தியா

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடைமுறையிலிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், அங்கு மக்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதை அறிவதற்காக சென்ற போது, விமானநிலையத்தில் பெண் ஒருவர் அவரிடம் கதறி அழுத வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடைமுறையிலிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், போராட்டங்கள் வெடிக்கின்றன. இதன் காரணமாக அங்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, காஷ்மீரிலிருந்து வரும் செய்திகள் கவலையாக இருப்பதாகவும், அங்கு இருக்கும் நிலையை அறிய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து தான் சொன்னபடியே நேற்று முன்தினம் ராகுல்காந்தி, அவருடன் குலாம் நபி ஆசாத், கே.சி வேணுகோபால், ஆனந்த் சர்மா, திரிணாமுல் காங்கிரஸின் தினேஷ் திரிவேதி, தி.மு.க-வின் திருச்சி சிவா, சிபி,ஐ கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி, ராஜா, சரத் யாதவ் போன்ற பல தலைவர்கள் சென்றிருந்தனர்.

டெல்லியிலிருந்து விமானம் மூலம் காஷ்மீர் புறப்பட்ட அவர்கள், சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஸ்ரீ நகர் சென்றடைந்தனர்.

அப்போது விமான நிலையத்திலேயே அனைத்து தலைவர்களையும் வழிமறித்த அதிகாரிகள், இதற்கு மேல் செல்ல உங்களுக்கு அனுமதி இல்லை என கூறினர்.

இதனால் நீண்ட வாக்குவாதம் சென்றது. இருப்பினும் எதுவும் செய்ய செய்யமுடியாததால், அனைவரும் டெல்லி செல்வதற்காக விமானத்தில் பயணித்தனர்.

விமானத்தில், ராகுல் காந்தி மற்ற தலைவர்களுடன் அமர்ந்திருந்தார். அப்போது, அதே விமானத்தில் பயணித்த ஒரு பெண், ராகுல் காந்தியைப் பார்த்ததும் காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையை கண்ணீர்மல்க கூறினர்.

அதில், காஷ்மீரில் உள்ள எங்கள் குழந்தைகள் வெளியில் வரமுடியாமல் வீட்டுக்குள்ளேயே சிறைப்பட்டுள்ளனர். என் சகோதரர் ஒரு இதய நோயாளி, கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக அவர் மருத்துவரைச் சந்திக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்.

நாங்கள் பல்வேறு வழிகளில் மன உழைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறோம். நாங்கள் பெரும் பிரச்னையில் இருக்கிறோம் என்று கதறி அழுதார்.

அப்போது ராகுல்காந்தியின் பாதுகாப்பாளர்கள் அவரின் கையை பிடித்து அப்புறப்படுத்திய போதும், அந்த பெண் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்ததால், அவரின் கையை பிடித்து ராகுல்காந்தி ஆறுதல் கூறினார்.

இதை அங்கிருக்கும் நபர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைக் கண்ட உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இன்னும் எத்தனை நாள்களுக்கு இதே நிலை நீடிக்கும். காஷ்மீரில் இருக்கும் அனைத்து ஜனநாயக உரிமைகளைத் தடை செய்வதைவிடவும் பெரிய அரசியல் மற்றும் தேச விரோதம் வேறு எதுவும் இல்லை.

இதற்கு எதிராகக் குரல் எழுப்பவேண்டியது ஒவ்வொருவரின் கடமை. நாங்கள் குரல் எழுப்புவதை நிறுத்த மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்