காமராஜர் நண்பரின் 250 கோடி ரூபாய் சொத்து அபகரிப்பு... விசாரணையில் தெரியவந்த உண்மை

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் காமராஜரின் நெருங்கிய நண்பருக்கு சொந்தமான 250 கோடி ரூபாய் சொத்தை அபகரித்த 2 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், இந்த வழக்கை திரும்ப பெற கோரி கொலை மிரட்டல் விடுவதாக தொழிலதிபர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் நாகராஜன் (66), இவர் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில், முன்னாள் முதல்வர் காமராஜரின் நண்பர் சங்கு கணேசனின் மகள்வழி பேரன் நான். சங்கு கணேசனுக்கு சென்னை முத்தையால்பேட்டை, வரதா முத்தியப்பன் தெருவில் 1950-ல் சொந்தமாக இடம் வாங்கி மகள் கம்பெனி என்கிற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தார்.

அப்போது, அவரது உதவியாளராக ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் அருள்ராஜ் ஆகியோர் உடன் பணியாற்றி வந்தனர்.

எனது தாயார் மற்றும் தாயாரின் உடன்பிறந்த சகோதரிகள் இறந்த பிறகு வாரிசுதாரர் அடிப்படையில் முத்தையால் பேட்டை சொத்து தொடர்பான ஆவணங்களை எடுத்து பார்த்த போது, எனது தாத்தாவிடம் உதவியாளராக இருந்த ராஜேந்திரன் இறந்த பிறகு, அவரது மகன் அருள்ராஜன் எனது தாத்தா சங்கு கணேசன் சொத்துக்கள் விற்றது போல் ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணங்கள் மூலம் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அபகரித்துக் கொண்டது தெரியவந்தது.

ஏற்கனவே, எனது தாத்தா சங்கு கணேசன் தானமாக கொடுத்த சொத்துக்கள் உள்ளிட்ட ஆவணங்களில் இருக்கும் கையெழுத்து மற்றும் முத்தையால்பேட்டை சொத்து விற்பனை ஆணையத்துடன் ஒப்பிட்டு பார்த்த போது வெவ்வேறாக இருந்ததால், சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சங்கு கணேசன் சொத்தை அவர் தனக்கு விற்பனை செய்தது போல் போலி ஆவணம் தயாரித்து 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அருள்ராஜன் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் அபகரித்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு பொலிசார் அருள்ராஜன் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது ஐபிசி 419, 465, 467, 471 உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

பொலிசில் கொடுத்த வழக்கை திரும்ப பெற கோரி அருள்ராஜன் அடியாட்களை வைத்து மிரட்டுவதாக பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மீண்டும் தொழிலதிபர் நாகராஜன் புகார் அளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்