ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து.. 20 பேர் பலி! மேலும் பலர் இறந்திருக்கலாம் என அச்சம்

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 20 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் ஷிர்பூரை அடுத்த வகாடி கிராமத்தில் ரசாயன தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. அம்மாநில தொழில் வளர்ச்சிக் கழக வளாகத்தில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில் இன்று காலை சுமார் 100 பேர் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதுமே கரும் புகைமண்டலம் பரவியது. வெடிச்சத்தம் சுற்று வட்டார கிராமங்களில் கடும் அதிர்வை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாக முதலில் கூறப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் படுகாயமடைந்த பலரது உடல்நிலை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு படையினர், காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.

இந்நிலையில், 70க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலைக்குள் சிக்கியிருக்கக் கூடும் என்றும், எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தொழிற்சாலையில் இருந்த சக்தி வாய்ந்த சிலிண்டர்கள் வெடித்ததே இந்த விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்