தமிழ் பெண்ணுக்கு கிடைத்த மிகப் பெரிய பதவி... தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை யார்?

Report Print Kabilan in இந்தியா

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குடியரசுத் தலைவர் அலுவலகம் இதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி தெலங்கானா, கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்திற்கு புதிய ஆளுநராக, முன்னாள் மத்திய அமைச்சர் ஆரிப் முகமது கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதில் தெலங்கானா மாநிலத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழக பா.ஜ.கவின் தலைவராக உள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த தமிழிசை சவுந்தரராஜன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான குமரி அனந்தனின் மகள் ஆவார்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்ற தமிழிசை, எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் மகப்பேறு மருத்துவம் பயின்றார். மேலும், கனடாவில் சோனாலஜி மற்றும் எஃப்இடி தெரபி பயின்றுள்ளார். அதற்கு முன்பாக ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக 5 ஆண்டுகள் பணியாற்றினார்.

பல்வேறு மருத்துவமனைகளுக்கு மருத்துவ ஆலோசகராகவும் இருந்த தமிழிசைக்கு, சிறுவயது முதல் அரசியல் மீது ஆர்வம் இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பா.ஜ.கவில் இணைந்த அவர், 1999ஆம் ஆண்டு தென் சென்னை மாவட்ட மருத்துவ அணி தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர், 2001ஆம் ஆண்டு மருத்துவ அணியின் மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் படிபடிப்பாக அரசியலில் உயர்ந்த தமிழிசை, 2007ஆம் ஆண்டு மாநிலப் பொதுச்செயலாளராகவும், 2010ஆம் ஆண்டு மாநில பா.ஜ.க துணை தலைவராகவும், பின் 2013ஆம் ஆண்டு தேசிய செயலாளராகவும் பதவி உயர்வுகளை பெற்றார். கடந்த 2014ஆம் ஆண்டு தமிழக பா.ஜ.கவின் தலைவராக நியமிக்கப்பட்ட தமிழிசை சவுந்தரராஜனின் பதவிக்காலம் முடிவடைந்ததும், மீண்டும் அவரே தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், வரும் டிசம்பர் மாதம் அவரது பதவிக்காலம் முடிவடையும் நிலையில், தற்போது அண்டை மாநிலமான தெலங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்