2 நாட்களாக பூட்டப்பட்டிருந்த வீடு... மாயமான பெண் மருத்துவர்: பெற்றோருக்கு வந்த அதிர்ச்சி தகவல்

Report Print Vijay Amburore in இந்தியா

சென்னையில் இரண்டு நாட்களாக மாயமாகியிருந்த பெண் மருத்துவர் தன்னுடைய காதல் கணவருடன் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.

சென்னையை சேர்ந்த இளங்கோ-ஆண்டாள் தம்பதியினருக்கு சுபாஷினி என்கிற மகள் இருக்கிறார். ரஷ்யாவில் எம்.பி.பி.எஸ். படித்து முடித்து விட்டு புதுவையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

அப்பகுதியில் தனியாக அறை எடுத்து தங்கி பணிக்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் சுபாஷினிக்கு வீட்டில் திருமணம் செய்வதற்கான வேலைகளில் அவருடைய பெற்றோர் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனால் இதற்கு சுபாஷினி மறுப்பு கூறியதாக தெரிகிறது.

2 தினங்களுக்கு முன் சுபாஷினிக்கு அவருடைய தாய் ஆண்டாள் போன் செய்தபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ளது.

இதனையடுத்து மகள் தங்கியிருந்த வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு வீடு பூட்டப்பட்டிருப்பதை பார்த்து, பணிபுரியும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கிருந்த சக ஊழியர்கள், சுபாஷினி மருத்துவமனைக்கு இரண்டு நாட்களாக வரவில்லை எனக்கூறியுள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவருடைய பெற்றோர் உறவினர்களிடம் தீவிரமாக விசாரித்து விட்டு, பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் புதுச்சேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சுபாஷினி, தனது காதல் கணவரான அகிலனுடன் ஆஜரானார். நானும், அகிலனும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தோம். இதுபற்றி கடந்த 24-ந் தேதி எங்களது பெற்றோரிடம் தெரிவித்தோம். திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. எனவே கடந்த 28-ந் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டோம் என நீதிபதியிடம் கூறியுள்ளனர்.

இதனை கேட்டறிந்த நீதிபதி இருவரையும் கோரிமேடு பொலிஸ் நிலையத்திற்கு செல்லுமாறு உத்தரவிட்டார். அங்கு சென்றதும், சுபாஷினி, தான் அகிலனுடன் செல்ல விரும்புவதாக கூறியுள்ளார். இதனை கேட்ட பொலிஸார் அவருடைய காதல் கணவருடன் அனுப்பி வைத்து வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்