ரத்தம் குடிக்க துடிக்கிறீர்களா! சுபஸ்ரீ விவகாரத்தில் உயர்நீதிமன்றம் கொந்தளிப்பு

Report Print Vijay Amburore in இந்தியா

திருமண பதாகையால் சுபஸ்ரீ என்கிற இளம்பெண் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகளை உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.

சென்னையை சேர்ந்த சுபஸ்ரீ என்கிற 23 வயது இளம்பெண் நேற்றைய தினம் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த போது, சாலையில் வைக்கப்பட்டிருந்த அதிமுக கட்சியை சேர்ந்தவரின் திருமண பதாகை ஒன்று அவர் மீது சரிந்து விழுந்துள்ளது.

இதனால் நிலைகுலைந்த சுபஸ்ரீ தண்ணீர் லொறியின் கீழ் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவமானது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற அசாதாரண உயிரிழப்புகளால் அரசியல் கட்சியினர் மீது பொதுமக்கள் கடும் கோபத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் உயர்நீதிமன்றம் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஒரு உயிரின் மதிப்பு அதிகாரிகளுக்கு தெரியவில்லையா? பேனர் விவகாரத்தில் இன்னும் எத்தனை எத்தனை உயிர்களை பலி வாங்க துடிக்கிறீர்கள்? சட்டவிரோத பேனர்களை ஒழிக்கும் விவகாரத்தில் இன்னும் எவ்வளவு ரத்தம் தேவைப்படுகிறது? சட்டவிரோத பேனர் விவகாரத்தில் அதிகாரிகள் ரத்தம் குடிக்க துடிக்கிறீர்களா என உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால் இந்த கேள்விகளுக்கு எவற்றிற்குமே பதிலளிக்க முடியாமல் அரசு தரப்பு வழக்கறிஞர் திணறியுள்ளார்.

சட்டவிரோத பேனர்கள் விவகாரத்தில் எத்தனை உத்தரவு பிறப்பித்தாலும் விதிமீறல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

மேலும், சட்டவிரோதமாக பேனர் வைக்க கூடாது என முதலமைச்சர் கட்சியினருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல பேனர் வைக்க கூடாது என கட்சியினருக்கு திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் கூட ஏன் வெளிப்படையாக தெரிவிக்காமல் இருக்கிறார் என்று திமுக வழக்கறிஞரிடமும் கேள்வி எழுப்பியுள்ளது.

சுபஸ்ரீ இறந்த இடத்தில் விபத்து நடந்த இடத்தின் அதிகாரிகள் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்