விமான நிலையத்தில் வந்து இறங்கிய 89 வயது முதியவர்.. சோதனையில் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Report Print Kabilan in இந்தியா

ஹாங்காங்கில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்த 89 வயது முதியவரை, சோதனையிட்டபோது அதிகாரிகள் அதிர்ச்சியடைந்த சம்பவம் நடந்துள்ளது.

நேற்றைய தினம் Karnail Singh என்ற 89 வயது முதியவர், ஹாங்காங்கில் இருந்து இந்தியாவின் டெல்லி விமான நிலையத்திற்கு வந்து இறங்கினார். ஆனால், அவரது வயதிற்கு ஏற்றாற்போல் இல்லாமல் இளமையாக இருப்பது, குடிவரவு அதிகாரிகளுக்கு சந்தேகத்தை கிளப்பியது.

அதனைத் தொடர்ந்து, அந்த முதியவரின் கடவுச்சீட்டை அதிகாரிகள் வாங்கி பார்த்தபோது, அவர் பெயர் Karnail Singh(89) என்றும், பிறந்த திகதி 20 அக்டோபர் 1930 என்றும் இருந்துள்ளது.

எனினும் அவர் மீது இருந்த சந்தேகத்தால் பொலிசார் அவரை விரிவான சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது அவர் 89 வயது நபரைப் போல் வேடமிட்டிருந்தது தெரிய வந்து, அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த நபரின் உண்மையான பெயர் Gurdeep Singh என்பதும், பஞ்சாப்பின் மோகா மாவட்டத்தைச் சேர்ந்த அவருக்கு வயது 68 என்பதும் தெரியவந்தது. அத்துடன் அவரது உண்மையான பிறந்த திகதி 16 மார்ச் 1951 என்பதும் அம்பலமானது.

அவர் கடந்த 1995ஆம் ஆண்டில் முதன் முறையாக ஹாங்காங்கிற்கு சென்றுள்ளார். பலமுறை அந்நாட்டிற்கு சென்றும் அவரால் அங்கு நிரந்தர வாழிட உரிமையை பெற முடியவில்லை.

அதனைத் தொடர்ந்து, 2006ஆம் ஆண்டு Karnail Singh என்ற பெயரில் போலி கடவுச்சீட்டை தயார் செய்துள்ளார். அதில் தனது பிறந்த திகதியையும் 20 அக்டோபர் 1930 என மாற்றியுள்ளார். அதன்மூலம் ஹாங்காங்கில் நிரந்தர வாழிட உரிமையைப் பெற்ற Gurdeep Singh, தற்போது டெல்லி விமான நிலையத்தில் அதிகாரிகளின் சோதனையில் சிக்கியுள்ளார்.

ஏற்கனவே, கடந்த திங்கட்கிழமையன்று டெல்லியில் இருந்து நியூயார்க் நகருக்கு செல்லவிருந்த 81 வயது முதியவரை சோதனையிட்டபோது, அவர் 31 வயது இளைஞர் என்பதும், போலி கடவுச்சீட்டைக் கொண்டு வெளிநாடு செல்ல முயன்றதும் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்