மாயமான இளம்பெண்... பனிமூட்டத்தில் 90 மணி நேர தேடுதல்..! கடைசியில் கிடைத்த சோகம்

Report Print Vijay Amburore in இந்தியா

ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண் மஹாராஷ்டிராவில் உள்ள மலைப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐதராபாத்தை சேர்ந்த அலிஜா ராணா (24) என்கிற இளம்பெண் புனேவில் உள்ள ஐடி துறையில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த வியாழக்கிழமையன்று தன்னுடைய வாட்ஸ் அப்பில் "போய் வருகிறேன்" என ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.

இதனை பார்த்த அவருடைய பெற்றோர் மகளுக்கு போன் செய்து பார்த்துள்ளனர். ஆனால் அவர் அழைப்பை ஏற்காததால், பொலிஸ் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து செல்போன் சிக்னலை வைத்து கடைசியாக அவர் சென்ற இடத்தை கண்டுபிடித்து அந்த இடத்திற்கு சென்றனர்.

வியாழக்கிழமை மாலை லோனாவாலா பகுதியில் அவரது பணப்பையும், மொபைலும் கண்டுபிடிக்கப்பட்டன. அதனடிப்படையில் ஷிவ்தர்க் மித்ரா என்ற மலையேற்றக் குழுவைச் சேர்ந்த 32 மலையேற்றக்காரர்களுடன் உள்ளுர் பொலிஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட ஆரம்பித்தனர்.

தொடர்மழை மற்றும் பனிமூட்டத்தால் அவரை கண்டுபிடிப்பதற்கு அந்த குழுவினர் பெரும் சிரமம் அடைந்துள்ளனர். மீண்டும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தேடுதல் பணி ஆரம்பமானது. வெவ்வேறு பகுதிகளில் பிரிந்து தேடிக்கொண்டிருந்த குழுவினர் வாக்கி டாக்கீ மூலம் தங்களுடன் தொடர்பிலே இருந்தனர்.

மதியம் மூன்று மணியளவில் ராகுல் என்பவர், அலிஜாவின் உடலை கண்டுபிடித்து விட்டதாக மற்றவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே அங்கு விரைந்த மற்ற மூன்று பேர், 300 அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அலிஜாவின் உடலை மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டு கொண்டு வந்தனர்.

இதனையடுத்து அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த பொலிஸார், தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers