இளைஞரை உயிரோடு எரித்துக் கொன்ற கும்பல்... அதிர்ச்சியில் தாயார் மரணம்: வெளியான பகீர் பின்னணி

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததற்காக தலித் இளைஞர் ஒருவர் உயிரோடு எரித்துக் கொல்லப் பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ஹார்டோய் மாவட்டத்தில் உள்ள படேசா பகுதியில் சனிக்கிழமை இந்த ஆணவக் கொலை நடந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இப்பிரச்சினை தொடர்பாக இளைஞரின் தாயாரின் மரணத்திற்கும் வழிவகுத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எரித்துக் கொல்லப்பட்ட மோனு என்ற 20 வயது இளைஞர் அதே கிராமத்தில் வேறொரு சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசுவது வழக்கம். இந்த விவகாரம் கிராம மக்களிடையே பேசப்பட, கோபமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் மோனுவை பழிவாங்க நேரம் பார்த்துக்கொண்டிருந்தனர்.

கடந்த சனிக்கிழமை அந்தப் பெண்ணை வழக்கமான ஓர் இடத்தில் சந்தித்துவிட்டு நேரடியாக வீட்டுக்கு செல்லாமல் தனது உடல்நலம் குன்றிய தாயார் ராம் பேட்டி (60) சிகிச்சைக்காக ரூ.25,000 ஏற்பாடு செய்த பின்னர் குடியிருப்புக்கு திரும்பியுள்ளார்.

அப்போது கும்பல் ஒன்று மோனுவை வீட்டுக்குள் செல்லாமல் தடுத்து அவர்கள் வேறொரு வீட்டிற்கு இழுத்துச் சென்றனர்.

அங்கு அவரிடமிருந்த பணத்தையும் பறித்துக்கொண்டு அவரை பிணைக் கைதி போல கட்டிவைத்து அடித்துள்ளனர்.

பின்னர் அந்த இளைஞரை உயிருடன் தீவைத்து எரித்தனர். இதில் அவரின் அலறல் சத்தத்தைக் கேட்ட உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இதனையடுத்து மோனுவை மீட்டு தீக்காயங்களிலிருந்து காப்பாற்ற உள்ளூரிலேயே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்குள்ள மருத்துவர்களால், அவர் லக்னோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பரிந்துரைக்கப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை லக்னோ செல்லும் வழியிலேயே அவர் மரணமடைந்துள்ளார். இதனிடையே மோனு உயிருடன் எரிக்கப்பட்ட செய்தியைக் கேட்ட மாத்திரத்திலேயே அந்த இளைஞரின் தாயார் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளதாக கிராமவாசிகள் பின்னர் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் இருவர், அவர்களது பக்கத்துவீட்டைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers