நண்பர்கள் சேர்ந்து வாங்கிய லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்! பின்னர் செய்த நெகிழ்ச்சி செயல்

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் கேரள மாநிலத்தில் 6 நண்பர்கள் சேர்ந்து வாங்கிய லொட்டரி சீட்டுக்கு முதல் பரிசாக ரூ.12 கோடி கிடைத்துள்ளது.

கேரளாவில் அரசு சார்பில் லொட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பண்டிகை காலங்களில் பம்பர் குலுக்கல்களும் நடத்தப்படுகின்றன. இந்த வகையில், ஓணம் பண்டிகையை ஒட்டி முதல் பரிசு ரூ.12 கோடி என்ற சிறப்பு லொட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டது.

ரூ.300-க்கு விற்கப்பட்ட இந்த லொட்டரியை 6 நண்பர்கள் இணைந்து வாங்கினர். இந்நிலையில், நேற்று இந்த லொட்டரி சீட்டு குலுக்கல் நடத்தப்பட்டு பரிசு பெற்றவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டது. அதில் நகை கடையில் ஊழியராக பணியாற்றும் குறித்த 6 நண்பர்களான ரோனி, சுபின் தோமஸ், ரெதீஷ், ராஜீவன், ரெதீஷ் குமார், ஜார்ஜ் ஆகியோர் முதல் பரிசை வென்றவர்கள் என்று தெரிய வந்தது.

பரிசை வென்ற நண்பர்கள் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஓணம் பண்டிகைக்காக ஊருக்கு புறப்பட்டு சென்றபோது, அப்பகுதியில் உள்ள சிவன் குட்டி என்ற லொட்டரி விற்பனையாளரிடம் அனைவரும் சேர்ந்து இந்த லொட்டரி சீட்டை வாங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வருமான வரி, ஏஜெண்டு ஊக்கத்தொகை போக பரிசை வென்றவர்களுக்கு ரூ.7 கோடியே 56 லட்சம் கிடைக்கும். இந்நிலையில், பரிசை வென்ற 6 நண்பர்களும் தங்களுக்கு கிடைத்த பரிசு பணத்தில், ஒரு சதவிதத்தை கேரள புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்