அப்பா பயமா இருக்கு வீட்டுக்கு போகலாம்... அழுத மகள்... தந்தையின் இரக்கமற்ற செயல்... அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் பெற்ற மகளை தந்தையே ஆற்றில் தூக்கி வீசிய நிலையில் மனமுடைந்த மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பத்தடி பாலத்தை சேர்ந்தவர் பாண்டி (35). கூலி தொழிலாளியான இவருடைய மனைவி ரேணுகாதேவி. இவர்களுக்கு ஷோபனா(13), லாவண்யா(11), ஹரீஸ்(9), ஸ்ரீமதி(7), குணசேகரன்(5) ஆகிய 5 குழந்தைகள் உள்ளனர்.

பாண்டிக்கும், அவருடைய மனைவி ரேணுகாதேவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் இருவரும் கடந்த ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

பாண்டிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் ரேணுகாதேவியின் சகோதரர் ஒருவர், குழந்தைகளை கவனிக்காமல் பொறுப்பில்லாமல் இருக்கிறாயே என பாண்டியிடம் கேட்டுள்ளார்.

இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த பாண்டி மதுபோதையில் தனது மகள்கள் லாவண்யா, ஸ்ரீமதி ஆகியோரை அந்த பகுதியில் உள்ள அரசலாற்றில் தூக்கி வீசி உள்ளார்.

இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆற்றில் குதித்து லாவண்யாவை மட்டும் மீட்டு கரை சேர்த்தனர்.

மேலும் ஆத்திரத்தில் பாண்டியை அடித்து உதைத்தனர்.

ஆனால் ஸ்ரீமதியை மட்டும் மீட்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து கும்பகோணம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்து சிறுமியை தேடி பார்த்தனர். நேற்று வரை 3 நாட்களாக தொடர்ந்து ஆற்றில் தேடி பார்த்தனர். நேற்று மாலை வரை ஸ்ரீமதி உடலை மீட்க முடியவில்லை.

இதனிடையில் சம்பவம் குறித்து பேசிய லாவண்யா, என்னையும் பாப்பாவையும் அப்பா ஆத்துக்கு கூட்டிட்டுப் போனாங்க.

அங்கேயே அதிக நேரம் உட்கார்ந்திருந்தோம். அப்போது ஸ்ரீமதி, அப்பா பயமா இருக்கு. வீட்டுக்குப் போலாம் என அழுதாள்.

அப்பாவோ, ஆத்துக்குள்ள விழுந்தால் எப்படியிருக்கும் என கேட்டார்.

உடனே ஸ்ரீமதி போப்பா, நான் விழமாட்டேன் என்றாள். ஆனால் திடீர் என எங்களை தூக்கி ஆற்றில் வீசிவிட்டார் என கூறினார்.

இந்நிலையில் மகள் ஸ்ரீமதி உடலை மீட்க முடியாததால் தாய் ரேணுகாதேவி மிகவும் வேதனையில் இருந்து வந்தார்.

இதையடுத்து நேற்று மாலை துக்கம் தாங்காமல் ரேணுகா தேவி திடீரென தனது உடலில் எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது அங்கு நின்ற உறவினர்கள் மற்றும் கிராம மக்களும் அதிர்ச்சி அடைந்து உடனே விரைந்து சென்று ரேணுகாதேவியை மீட்டு மருத்துமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்