தாயை வீட்டில் பூட்டி வைத்து உடலில் புழுக்கள் அரிக்கும் அளவுக்கு துன்புறுத்திய மகன்.. கண்ணீர் வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

கேரளாவில் பெற்ற தாயை வீட்டுக்குள் பூட்டி வைத்து அவர் உடலில் புண்கள் ஏற்பட்டு அவை அழுகி கடும் வலியை ஏற்படுத்தும் நிலைக்கு தள்ளிய மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் அருகே உள்ள ரசல்புரம் பகுதியை சேர்ந்தவர் லலிதா (75). இவருக்கு ஜெயக்குமார் (45) உட்பட 4 பிள்ளைகள் உள்ளனர்.

மற்ற 3 பேரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வரும் நிலையில் ஜெயக்குமார் தாயுடன் வசித்து வந்தார்.

லலிதாவின் பெயரில் 30 சென்ட் நிலமும், வீடும், வங்கியில் 15 லட்சம் பணமும் உள்ளது. ஜெயக்குமார் தாயை மிரட்டி இவற்றை தனது பெயருக்கு எழுதி வாங்கினார்.

இது சகோதரர்களுக்கு தெரியாமல் இருக்க அவர்கள் யாரையும் வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஜெயக்குமார் தாய்க்கு சரியாக உணவு கொடுக்காமலும், பராமரிக்காமலும் அவரை வீட்டில் பூட்டி வைத்திருந்தார்.

மேலும் தாய் நலமாக இருப்பதாக ஏமாற்ற அவரை வலுக்கட்டாயமாக நடக்க வைத்து வீடியோ எடுத்து சகோதரர்களுக்கு அனுப்பியுள்ளார்

இதனால் லலிதாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமானது. மேலும் உடலில் புண்கள் ஏற்பட்டு அவை அழுகி கடும் வலியை ஏற்படுத்தியது. இதனால் வலி பொறுக்க முடியாமல் லலிதா அலறினார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் விரைந்து வந்து ஜெயக்குமார் வீட்டு கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை.

பின்னர் பொலிசாருக்கு தகவல் தரப்பட்டதால் அவர்கள் அங்கு வந்து சுவர் ஏறி குதித்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது லலிதா உடலில் புழுக்கள் அரித்து ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்த பொலிசார் ஜெயக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்