சர்ச்சைகளை ஏற்படுத்திய ரஃபேல் போர் விமானம் இந்தியாவிடம் இன்று ஒப்படைப்பு.. விமானத்தின் சிறப்பம்சங்கள்!

Report Print Kabilan in இந்தியா

பிரான்ஸிடம் இருந்து வாங்கப்படும் ரஃபேல் ரக போர் விமானம், இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ள நிலையில் அதன் சிறப்பம்சங்கள் குறித்து காண்போம்.

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து வாங்கப்படும் ரஃபேல் ரக போர் விமானத்தை டஸால்ட் ஏவியேஷன் எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. 2016ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 36 ரஃபேல் விமானங்களை இந்தியா பெறுகிறது.

இந்த விமானத்தை வாங்குவது தொடர்பாக தேசிய அளவில் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. அதிக விலை கொடுத்து தற்போதைய அரசு இந்த விமானத்தை வாங்குவதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில் தான், பிரான்சில் தயாரிக்கப்பட்ட முதல் ரஃபேல் போர் விமானம் இன்று அதிகாரப்பூர்வமாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த விமானத்தை பெறுகிறார்.

ரஃபேல் விமானத்தின் சிறப்பு அம்சங்கள்
  • இந்த விமானத்தில் ஒரு முறை எரிபொருள் நிரப்பினால், 3 ஆயிரத்து 700 கிலோ மீற்றர் தூரத்திற்கு சென்று இலக்கை தாக்கலாம்.
  • இது அதிகபட்சமாக மணிக்கு ஆயிரத்து 389 கிலோ மீற்றர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.
  • எதிரிகளை அடையாளம் காண ரேடார் எச்சரிக்கை கருவி இதில் பொருத்தப்பட்டுள்ளது.
  • இதில் துல்லியமாக இலக்குகளை தாக்கக்கூடிய ஏவுகணைகள், பீரங்கி, இதர அதிநவீன ஆயுதங்கள் ஆகியவற்றை பொருத்தலாம்.
  • ரஃபேல் விமானத்தின் எடை 10 டன் (10 ஆயிரம் கிலோ) ஆகும். அதே சமயம், எரிபொருள் மற்றும் ஆயுதங்கள் நிரப்பப்பட்டவுடன், இதன் எடை 24 ஆயிரத்து 500 கிலோவாக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
  • இந்த விமானத்தின் நீளம் 15.3 மீற்றர். இறக்கையின் நீளம் 10.8 மீற்றர். உயரம் 5.3 மீற்றர்.
  • இந்த விமானத்தினைக் கொண்டு 24 மணிநேரத்தில் 5 முறை தாக்குதல் நடத்தலாம்.
  • ஒரு ரஃபேல் விமானத்தின் விலை இந்திய மதிப்பில் 731 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்