சயனைடு மல்லிகா பாணியில் குடும்பத்தை கருவறுத்த கேரள ஜோளி: யார் இந்த சயனைடு மல்லிகா?

Report Print Arbin Arbin in இந்தியா
395Shares

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை உலுக்கிய சயனைடு மல்லிகா பாணியிலேயே கேரளாவில் ஜோளியும் தமது உறவுகளை கருவறுத்ததாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

தனது பெயருடன் சயனைடை அடைமொழியாக கொண்ட மல்லிகா தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

மல்லிகாவின் இயற்பெயர் கெம்பம்மா. பெங்களூரு அருகே கக்கலிபுரம் கிராமத்தில் பிறந்தவர். குடும்பம் வறுமையில் வாடியதால் பணத்தின் மீது மோகம் கொண்ட கெம்பம்மா சிட்பண்ட் தொழிலில் ஈடுபட்டார்.

அதில் நஷ்டம் ஏற்படவே வறுமையைப் போக்க கூலி வேலைக்குச் சென்றார். பின்னர் ஒரு நகைக்கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

ஆனால் பேராசை கெம்பம்மாவைக் கொலை செய்யத் தூண்டியுள்ளது. இவர் கையாண்ட பாணியே வித்தியாசமானது.

கோயிலுக்கு வந்து தங்களது கஷ்டங்களை கடவுளிடம் கொட்டித்தீர்க்கும் பெண்கள்தான் கெம்பம்மாவின் குறி.

முதலில் குறித்தப் பெண்களின் குறைகளைக் கேட்பார். நோயை குணப்படுத்துவேன், குழந்தை வரம் கிடைக்க பரிகாரங்கள் செய்வேன் எனக் கூறி பெண்களை நம்பவைக்கத் தொடங்கினார். கிராமப்புறங்களில் உள்ள கோயில்கள்தான் இவர் அதிகம் குறிவைத்துள்ளார்.

பரிகாரங்கள், பூஜைகள் செய்தால் உங்களது கஷ்டங்கள் போகும் எனக் கூறுவார். அதை நம்பி வரும் பெண்களுக்கு சயனைடு கலந்த நீரை தீர்த்தமாக கொடுத்து அவர்கள் அணிந்திருக்கும் நகைகளைக் கொள்ளையடிப்பார்.

தங்க நகை பாலிஷ் போடும் கடையில் இருந்துதான் சயனைடு இவருக்குக் கிடைத்துள்ளது.

2000 ஆம் ஆண்டு பெண் ஒருவர் தமது கஷ்டத்தைக் கூறி இவரிடம் சென்றுள்ளார். சிறப்பு பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என அவரின் வீட்டுக்குச் சென்று சயனைடு கலந்த தீர்த்தத்தைக் கொடுத்துள்ளார்.

வீட்டில் இருந்த நகை மற்றும் பொருள்களை திருடியுள்ளார். அந்தப்பெண் கூச்சலிட்டதையடுத்து அக்கம்பக்கத்தினர் மீட்டுள்ளனர்.

இந்த வழக்கில் 6 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார். 2007-ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளையில் தீவிரமாக இறங்கினார்.

3 மாதத்தில் இவர் 5 பெண்களிடம் கைவரிசை காட்டினார். 2009 ஆம் ஆண்டு பெங்களூரு பேருந்து நிலையத்தில் நகைகளுடன் நின்றிருந்த கெம்பம்மாவை சந்தேகத்தின் பேரில் பொலிசார் கைது செய்தனர்.

காவல்துறையினரின் விசாரணையில் நகைகளுக்காகப் பெண்களை தொடர்ச்சியாக ஏமாற்றியதையும் சிலரைக் கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார்.

பெங்களூரு முதன்மை நீதிமன்றம் `சயனைடு மல்லிகா’ எனும் கெம்பம்மாவுக்கு தூக்குத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

2012-ம் ஆண்டு மற்றொரு வழக்கில் இவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

கேரளாவின் ஜோளிக்கும் இந்த சயனைடு மல்லிகாவுக்கும் இடையேயான ஒற்றுமை சயனைடு மற்றும் பேராசை. காதல் திருமணம் செய்து கொண்ட ஜோளி தன் பேராசையால் தனது உறவுகளைக் கொலை செய்துள்ளார்.

ஏழ்மை நிலையை விரும்பாத மல்லிகா பணத்தைக் குறிக்கோளாக கொண்டு இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்