சொர்க்கத்தில் இருப்பது போல சொகுசாக வாழும் சசிகலா! சிறையில் இருக்கும் வசதிகளின் பட்டியல் வெளியானது

Report Print Raju Raju in இந்தியா

பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா சொர்க்கத்தில் இருப்பதை போல சொகுசாக வாழ்கிறார் எனவும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி பேசியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா இரண்டாண்டுகளுக்கும் மேலாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில் சிறைத் துறை அதிகாரியாக இருந்த சத்யநாரயண ராவ் ரூபாய் 2 கோடி லஞ்சம் பெற்று, சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகளை கொடுத்ததாக தகவல் வெளியானது.

இது குறித்த அறிக்கை தாக்கல் செய்து இரண்டாண்டுகள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சசிகலாவுக்கு சலுகைகளை அளித்து வருவதாகவும் கர்நாடகாவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவும் இளவரசியும், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சொர்க்கத்தில் இருப்பதைப் போல சொகுசு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இது குறித்து வினய்குமார் தலைமையிலான கமிஷன், சிறைக்குள் சென்று பல கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு, கடந்த 2017 நவம்பர் மாதம் அரசுக்கு அறிக்கை தாக்கல்செய்தது.

அந்த அறிக்கையில், 'சசிகலா, இளவரசிக்கு 5 செல்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இவர்களுக்கு மட்டும் சிறப்புச் சமையலராக அஜந்தா என்ற சிறைவாசி இருப்பதாக சிறைத்துறை மருத்துவர் உமா தெரிவித்தார்.

தன்னைப் பார்க்க வரும் பார்வையாளர்களுக்காகத் தனியாக சௌகரியமான மீட்டிங் ஹால் கொடுக்கப்பட்டிருக்கிறது. சொந்தமாகக் கட்டில், மெத்தை, படுக்கைகள் மற்றும் உடைகளும், இதர பொருள்களும் வைத்திருந்தார்கள்.

சசிகலாவுக்கு இருக்கும் கட்டில் மெத்தையைப் போல மற்ற சிறைவாசிகளுக்குக் கொடுக்கப்படவில்லை. சசிகலாவுக்காக தனியாக, தரமான கம்பெனி எல்.ஈ.டி டி.வி பொருத்தப்பட்டுள்ளது.

மற்ற சிறைவாசிகளுக்குப் பழைய பெட்டி டி.வி இருக்கிறது என அந்த அறிக்கையில் உள்ளதாக கூறியுள்ளார்.

இது குறித்து அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறுகையில், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமான வரி கட்டிவருகிறார்கள்.

அவர்கள் முதல் வகுப்பு பெற அனைத்து தகுதியும் உண்டு என வழக்காடு மன்றம் உத்தரவிட்ட போதிலும் அவர்கள் முதல் வகுப்பைப் பயன்படுத்தவில்லை.

இது தொடர்பாக வினய்குமார் கமிஷனில் பெரிய குற்றச்சாட்டு எதுவும் இல்லை. சசிகலா உள்ளிட்ட மூவரும் விரைவில் விடுதலையாவார்கள் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்