சென்னையில் இறந்த பெண் காவலர்.. உடலை சுமந்த துணை காவல் ஆணையாளர்! சொன்ன காரணம்

Report Print Kabilan in இந்தியா

சென்னையில் உடல்நலக்குறைவால் இறந்த பெண் காவல் ஆய்வாளரின் உடலை, துணை காவல் ஆணையாளர் சுப்புலட்சுமி தலைமையிலான பெண் பொலிசாரே தூக்கிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

சென்னை வேப்பேரியைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி(48). தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த இவர், கடந்த 11ஆம் திகதி உடல்நலக்குறைவால் இறந்தார். இந்த தகவல் அவரது உறவினர்கள், நண்பர்கள், அவருடன் பணியாற்றிய பெண் பொலிசாரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அதன் பின்னர் கடந்த 12ஆம் திகதி ஸ்ரீதேவியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்ற வண்ணாரப்பேட்டை துணை காவல் ஆணையாளர் சுப்புலட்சுமி, ஆய்வாளர் ரமணி, இந்திராணி, ஏட்டு வரலட்சுமி மற்றும் பெண் பொலிசார் அனைவரும் ஸ்ரீதேவியின் உடலை தோளில் சுமந்து சென்றனர். காசிமேடு மயானம் வரை அவர்கள் உடலை சுமந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பேசிய துணை காவல் ஆணையாளர் சுப்புலட்சுமி, ‘ஆய்வாளர் ஸ்ரீதேவி இறந்த தகவல் கிடைத்ததும் அவரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு சென்றேன். தகன மையத்துக்கு ஸ்ரீதேவியின் சடலத்தை தூக்கியபோது நானும் சுமந்து சென்றேன். அந்த நேரத்தில் அப்படி தோன்றியதால் ஸ்ரீதேவியின் சடலத்தை தூக்கிச் சென்றேன்’ என தெரிவித்துள்ளார்.

இறந்த ஆய்வாளர் ஸ்ரீதேவியின் வளர்ப்பு மகன் முனுசாமி, தனது தாயிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வயிற்று வலி ஏற்பட்டது என்றும், உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் இருந்தது தெரியவந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தான் ஸ்ரீதேவி இறந்துள்ளார். அவரது உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்