7 பேர் விடுதலை குறித்து முடிவெடுத்த தமிழக ஆளுநர்... முதல்வரிடம் கூறிய முக்கிய தகவல்

Report Print Basu in இந்தியா

7 பேர் விடுதலை குறித்த தனது முடிவை முதல்வர் பழனிசாமியிடம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

2018ம் ஆம் ஆண்டு செப்டம்பர் 6ம் திகதி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள 7 பேரை விடுவிப்பது குறித்து அரசியல் சாசனத்தின் 161வது பிரிவின் கீழ் தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, செப்டம்பர் 9ம் திகதியன்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.

இந்தத் தீர்மானம் உடனடியாக தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. தமிழக அரசு பரிந்துரைத்துள்ள நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அரசியல் சாசனத்திற்குட்பட்டு முடிவெடுப்பேன் என ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பேரறிவாளன் உள்பட 7 பேரை முன்கூட்டியே விடுவிக்க அனுமதிக்கோரி ஆளுநருக்கு அமைச்சரவை பரிந்துரைத்தது குறித்து, அரசுக்கு எழுத்துப்பூர்வமாக ஆளுநர் இதுவரை பதிலளிக்காத நிலையில் தனது முடிவை முதல்வர் பழனிசாமியிடம் கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்