மூன்று மகன்களை வீட்டில் வைத்து பூட்டிய தந்தை.. கூரையை பிரித்து வெளியேறியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தில் மனைவியை வெட்டிக்கொன்றுவிட்டு கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், கோடங்கிபாளையம் வடக்கு காடு கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் சித்தன்-ஈஸ்வரி தம்பதி. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இந்த தம்பதியின் ஒரே மகள் நான்கு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இதனால் மனைவி, மகன்களுடன் ஒன்றாக வசித்து வந்த சித்தன், அடிக்கடி பணம் கேட்டு ஈஸ்வரியை அடித்ததாகவும், அவர் மீது சந்தேகப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இந்நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு தனது மனைவியை சித்தன் பணம் கேட்டு அடித்துள்ளார். எனினும், ஈஸ்வரி பணம் தராததால் அவரை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார் சித்தன்.

இதன் காரணமாக ஈஸ்வரி அருகில் உள்ள மாட்டு தொழுவத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தாயின் நிலையைக் கண்டு கலங்கிய மகன்கள் அவருக்கு ஒரு கொட்டகை அமைத்து கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதனை அறிந்த சித்தன் மனைவியுடன் பிரச்னை செய்துள்ளார்.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், சித்தன் மூன்று மகன்களையும் வீட்டில் வைத்து வெளியே பூட்டியுள்ளார். பின்னர் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். தாயின் அலறல் சத்தம் கேட்டு தவித்த மூன்று மகன்களும், வீட்டின் மேற்கூரையைப் பிரித்துக்கொண்டு வெளியே வந்து பார்த்தபோது, ஈஸ்வரி ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்துள்ளார்.

அவர்களது தந்தை அங்கிருந்து தப்பித்து சோளக்காட்டுக்குள் மறைந்துவிட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார், சித்தனை தேடிப்பிடித்தபோது அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டிருந்தது தெரிய வந்தது.

பின்னர் அவரை உடலைக் கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியை கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்