தனது உயிரை கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்திய சுர்ஜித்! இலங்கை தமிழர்கள் வசிக்கும் பகுதியில் நடந்த மாற்றம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தின் பல்லடத்தில் இலங்கை தமிழர்கள் வாழும் முகாம் பகுதியில் கவனிப்பாரற்றுக் கிடந்த 2 ஆழ்துளை கிணறுகளை சமூக ஆர்வலர்கள் தாமாகவே முன்வந்து மூடியுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தின் நடுக்காட்டுபட்டியை சேர்ந்த குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பயனற்று கிடக்கும் ஆழ்துளை கிணறுகளை மூடவேண்டும் என அரசு அறிவித்திருந்தது.

இதோடு சுர்ஜித்தின் மரணம் பலருக்கும் ஆழ்துளை கிணற்றை மூட வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து திருப்பூர் அடுத்த பல்லடம் அருகே இலங்கை தமிழர்கள் வசிக்கும் முகாம் பகுதியில் கவனிப்பாரற்றுக் கிடந்த 2 ஆழ்துளை கிணறுகளை சமூக ஆர்வலர்கள் தாமாகவே முன்வந்து மூடினர். இதேபோல் காங்கயம், தொட்டிபட்டி, சகாயபுரம், காந்திபுரம் ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை தாசில்தார் கூறுகையில்,

திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் கைவிடப்பட்ட அல்லது பயன்படுத்தாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

அந்த ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்